×

வழக்கறிஞர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போலீசாரை நீதிமன்றத்துக்குள் செல்லவிடாமல் வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

 

கள்ளக்குறிச்சி, ஜூலை 31: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராம ஏரியில் நேற்றுமுன்தினம் அனுமதி இன்றி கிராவல் மண் எடுப்பதாக வரஞ்சரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சென்று டிப்பர் லாரியில் கிராவல் மண் ஏற்றிய கடலூர் ஜே.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் சரண்ராஜ்(22), திருவண்ணாமலை மாவட்டம் ஊசம்பாடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் காந்தன்(32) ஆகிய 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான மொட்டையன் மகன் வெங்கடேசன்(40) என்பவர், இவரது விவசாய நிலத்திற்கு கிராவல் மண் எடுத்ததாகவும் மண் எடுக்க அதிகாரிகள் வழங்கப்பட்ட (டிரிப் சீட்) அனுமதி ஆவணங்களை எடுத்து கொண்டு வரஞ்சரம் காவல் நிலையம் சென்றுள்ளார்.

அப்போது அதனை வாங்கி பார்த்த உதவி ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் போலீசார், அனுமதி கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக ஏன் கிராவல் மண் எடுத்தீர்கள் என்றும், அரசு அனுமதி வழங்கியது டிராக்டர் வாகனத்திற்கு மட்டுமே, எப்படி டிப்பர் லாரியில் கிராவல் மண் எடுக்கலாம் என கூறி வழக்கறிஞர் வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அப்போது வழக்கறிஞர் வெங்கடேசன், என்னை ஏன் கைது செய்கிறீர்கள், என் மீது எந்த தவறும் இல்லை, லாரி உரிமையாளர் எனது மாமனார்தான். எனது விவசாய நிலத்திற்கு மண் எடுத்து செல்வதால் என் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வது நியாயமா என போலீசாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த போலீசார், நேற்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் வெங்கடேசன் மீது பொய் வழக்கு பதிந்து கைது செய்ததை கண்டித்து கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் சேகர், செயலாளர் பழனிவேல் ஆகியோர் தலைமையில் மூத்த வழக்கறிஞர் சண்முகம், வழக்கறிஞர்கள் இளவரசு, வேல்முருகன், ரங்கராஜன், இளையாபிள்ளை உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். மேலும் நீதிமன்ற பணிகளுக்கு போலீசாரை உள்ளே செல்ல விடாமல் வழக்கறிஞர்கள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பிரீத்தா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் போராட்டம் சம்மந்தமாக காவல்துறை அதிகாரிகள், நீதிபதியிடம் முறையிட்டதையடுத்து, கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசனுக்கு நீதிமன்றம் உடனே ஜாமீன் வழங்கியது. இதையடுத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு, காலை 11 மணி முதல் நீதிமன்ற பணிகளுக்கு போலீசாரை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் நீதிமன்ற பணி பாதிக்கப்பட்டதோடு, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

போலீசாரை கண்டித்து மாவட்ட அளவில் போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு எதிராக காவல்துறையினர் செயல்படுவதை கண்டித்து வரும் 3ம் தேதி கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேகர், செயலாளர் பழனிவேல் ஆகியோர் அறிவித்தனர்.

 

Tags : Kallakurichi ,Varanjaram police ,Asakalathur ,Thiagathurugam ,Kallakurichi district ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...