×

குறிஞ்சிப்பாடியில் பரபரப்பு; டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரி பொதுமக்கள் தர்ணா: தாசில்தார் பேச்சுவார்த்தை

 

வடலூர், ஜூலை 31: அரசு மதுபான கடையை அகற்ற கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளான அண்ணா நகர், சுப்புராயர் நகர், கோல்டன் சிட்டி, பார்வதி நகர், பரமசிவம் நகர், ரெட்டியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை பத்தாண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு மது பிரியர்களால் தினம்தோறும் தொல்லைகள் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் கடையை நிரந்தரமாக மாற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசி 30 நாட்களில் கடையை மாற்றி தருகிறோம் என எழுத்து பூர்வமாக வாக்குறுதி அளித்ததன்பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அப்போது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குறிஞ்சிப்பாடி தாசில்தார் சுமித்ரா, கடலூர் டாஸ்மாக் மேலாளர் கந்தன் ஆகியோர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில், நேற்று காலை 12 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடை முன் ஒன்று திரண்டு கடையை திறக்க விடாமல் கண்டன கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சுமித்ரா மற்றும் கடலூர் டாஸ்மாக் மேலாளர் கந்தன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடை திறக்கப்படாது என கூறி உறுதியளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Tags : Kurinjipadi ,TASMAC ,Tahsildar ,Vadalur ,Kurinjipadi Town Panchayat ,Cuddalore district ,Anna Nagar ,Supparayar Nagar ,Golden City ,Parvathy Nagar ,Paramasivam Nagar ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...