திருப்போரூர் தொகுதிக்கு தவறாக வந்த 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: சீலை உடைக்க திமுக கடும் எதிர்ப்பு

திருப்போரூர், மார்ச் 17: திருப்போரூர் தொகுதிக்கு தவறுதலாக வந்த 2 வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீலை உடைத்து, பெட்டியை மாற்ற திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறையும் சீலிடப்பட்டுள்ளது. இந்தவேளையில், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு செல்ல வேண்டிய ஒரு இயந்திரமும், செங்கல்பட்டு தொகுதிக்கு செல்ல வேண்டிய மற்றொரு இயந்திரமும் தவறுதலாக திருப்போரூர் தொகுதிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று மதியம் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை வெளியே எடுத்து, உரிய தொகுதிகளுக்கு அனுப்புவது எனவும், திருப்போரூர் தொகுதிக்கு வர வேண்டிய இயந்திரங்களை மீண்டும் உள்ளே வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அனைத்து கட்சியினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

திமுக சார்பில் நகர செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் பரசுராமன், திமுக வழக்கறிஞர் சந்திரன், காங்கிரஸ் நகர தலைவர் தியாகராஜன், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், அதிமுக நகர செயலாளர் முத்து, பாமக நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, பரந்தாமன், பூபாலன், மோகன், பிரகாஷ் ஆகியோர் அங்கு சென்றனர். அவர்களிடம் திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் நடந்த தவறுகளை எடுத்து கூறி, அறையின் சீலை உடைத்து வாக்கு இயந்திரங்களை மாற்ற ஒத்துழைக்கும்படி கேட்டார். அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாறி இருப்பது முன்பே கண்டுபிடிக்கப்படாதது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து தலைமைக்கழகத்திற்கு தகவல் தெரிவித்து அதன்படி மட்டுமே செயல்பட முடியும் என கூறினர்.  இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன், உதவி தேர்தல் அலுவலர் ரஞ்சனி ஆகியோர் வெளியே எடுக்கப்படும். 2 வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக புதிதாக வைக்கப்படும் இயந்திரங்களை தனி பெட்டியில் வைத்து சீல் வைப்பதாகவும், அதில் உள்ள குறியீட்டு எண்களை குறிப்பிட்டு அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அளிக்கப்படும். அதில், வாக்கு எண்ணும்போது ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால், தாங்களே பொறுப்பு ஏற்பதாகவும் உறுதியளித்தனர்.

அதன்பின்னர், அறையின் சீல் உடைத்து இயந்திரங்களை எடுத்துச் செல்ல அனைத்துக் கட்சியினரும் சம்மதம் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு, தவறாக வைக்கப்பட்ட 2 இயந்திரங்கள் வெளியே எடுத்து, அறைக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து 2 இயந்திரங்களும் கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.

Related Stories:

>