×

திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லியில் ஆவணமின்றி எடுத்து சென்ற ₹12.13 லட்சம் அதிரடி பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை


திருவள்ளூர் மார்ச் 17: திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லியில் ஆவணமின்றி எடுத்து சென்ற ₹12.13 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக  பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஈக்காடு கண்டிகை சேர்ந்த ராமச்சந்திரன் நாயுடு என்பவர் நிலத்தை விற்க முன்பணம் பெற்று உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ₹5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கிளை கருவூலகம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆவடி: அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஐசிஎப் காலனி பகுதியில் அம்பத்தூர் தொழிற்பேட்டை எஸ்.ஐ ஜோதிவேல் தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக அயப்பாக்கம், பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சலூன் கடைக்காரர் லோகேஸ்வரன்(34) என்பவர் காரில் வந்தார்.  அந்த காரை போலீசார் வழிமடக்கி சோதனை செய்தனர். அதில், அவரிடம் ₹3 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் தி.நகரில் நகை வாங்க பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். மேலும், அந்த பணத்திற்கு அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் லோகேஸ்வரனிடம் இருந்து ₹3 லட்சத்தை பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர், போலீசார் அந்த பணத்தை அம்பத்தூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தாமரை செல்வியிடம் ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை அம்பத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி விஜயகுமாரி மூலமாக அம்பத்தூர் தாசில்தார் பார்வதியிடம் ஒப்படைத்தார். மேலும், தேர்தல் அதிகாரிகள் லோகேஸ்வரனிடம் உரிய ஆவணத்தை ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்று செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பினர். பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் தாசில்தார் அருண்குமார் தலைமையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த இரண்டு வாகனங்களை மடக்கி சோதனை செய்ததில் ஒரு வாகனத்தில் ₹4 லட்சத்து 13 ஆயிரம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர்.

Tags : Tiruvallur ,Avadi ,Poonamallee ,
× RELATED அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சி