திருவண்ணாமலை, ஜூலை 30: தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(45). இவரது மனைவி சத்யா. தம்பதி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி சீட்டு, மாதாந்திர ஏலச்சீட்டு ஆகியவற்றை நடத்தி வந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இவர்களிடம் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு கட்டியுள்ளனர். கடந்தாண்டு தீபாவளிக்கு தர வேண்டிய முதிர்வு தொகையை யாருக்கும் தரவில்லையாம். சீட்டு கட்டியவர்கள், தம்பதியிடம் சென்று கேட்டபோது, ‘6 மாதம் அவகாசம் கொடுங்கள். அனைவருக்கும் கொடுத்து விடுகிறோம்’ என கூறினார்களாம்.
ஆனால் 10 மாதங்கள் ஆகியும் இன்னும் பணத்தை தரவில்லையாம். அதேபோல் மாதாந்திர ஏலச்சீட்டு கட்டிய 75 பேருக்கும் முதிர்வுதொகை கொடுக்கவில்லையாம். பலமுறை கேட்டும் பணத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து சீட்டுக்கட்டிய நபர்கள் நேற்றுமுன்தினம் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தீபாவளி சீட்டு, மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், சத்யா இருவரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
