×

புதுச்சேரி தவளக்குப்பத்தில் மின்இணைப்பு கொடுக்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

 

தவளக்குப்பம், ஜூலை 30: பிரியாணி கடைக்கு மீண்டும் மின்இணைப்பு கொடுக்க தவளக்குப்பம் மின்அலுவலகத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி தவளக்குப்பத்தில் மின்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த ஆறுமுகம் (56) என்பவர் உதவி லைன் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பு அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில் மின் கட்டண பாக்கி இருப்பதால் அதிகாரியின் உத்தரவின்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பிரியாணி கடைக்கு மீண்டும் மின்இணைப்பு வழங்க கடை உரிமையாளரிடம் ஆறுமுகம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரியாணி கடைக்காரர், இது தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சீனியர் எஸ்பி லட்சுமி சவுஜன்யா உத்தரவின்பேரில் எஸ்பி நல்லாம்பாபு தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் `பொறி’ வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் தெரிவித்த ஆலோசனையின்பேரில் ரசாயன பொடி தடவிய ரூ.15 ஆயிரத்தை மின் அலுவலகத்தில் இருந்த ஆறுமுகத்திடம் பிரியாணி கடைக்காரர் நேற்று மதியம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ஆறுமுகத்தை சுற்றி வளைத்து, கையும் களவுமாக பிடித்தனர். அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து லஞ்ச பணம் ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து, முத்தியால்பேட்டையில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 7ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Thavalakuppam, Puducherry ,Thavalakuppam ,Thavalakuppam, Puducherry… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...