சித்தா, நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு மத்திய அரசு நீட் நுழைவுத்தேர்வு திணிப்பை முழுமையாக விலக்கி கொள்ள வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, மார்ச் 17: சித்தா, நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்பதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் சண்முகநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், பொதுநலனுக்கான செயற்பாட்டாளர்கள், அரசியல் இயக்கத்தினர் என அனைத்து தரப்பினரும் தமிழ்நாட்டில் அகில இந்தியப் பொதுமருத்துவ நுழைவுத்தேர்வினை (நீட் ) கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்திற்கு நீட்தேர்வுமுறையில் இருந்து முழுவிலக்கு அளிக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறோம்.

இத்தகைய எதிர்ப்புகளை, கோரிககைகளை பற்றி பொருட்படுத்தாது, மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வினை தமிழகத்தில் தொடந்து நடத்தி வருகிறது. நீட் தேர்வு வரும் 16 வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் முழுமையாக தமிழகத்தில் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உருவாகும் எனும் நம்பிக்கை எங்களிடம் இருந்தது. இத்தகைய நம்பிக்கை உதயமாகி இருக்கும் சட்டமன்றத் தேர்தல் காலத்தில், சித்தா, நர்சிங் மற்றும் உயிரியல் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு கட்டாயம் எனும் மத்தியரசின் அறிவிப்பை கண்டிக்கிறோம். மத்திய அரசால், எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பில் திணிக்கப்பட்டுள்ள நீட் நுழைவுத் தேர்வில் இருந்து முழுவிலக்கு வேண்டும் என்று தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து போராடி வருவதை பொருட்படுத்தாது, மத்திய அரசு சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோ, நர்சிங் மருத்துவப்படிப்புகளில் சேரவும், பயிலவும் நீட் தேர்வு விருப்பப்பூர்வமானது எனும் பெயரில் கட்டாயம் ஆக்குவது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதைப் போன்றதாகும்.

எனவே தமிழ்நாட்டின் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உழைக்கும் பகுதி மக்களின் குழந்தைகளின் மருத்துவக்கல்விக் கனவை சிதைக்கின்ற நீட் நுழைவுத்தேர்வு திணிப்பை மத்திய அரசு முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசின் நீட் நுழைவுத்தேர்வு திணிப்பினை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு சண்முகநாதன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>