×

நாகர்கோவிலில் குப்பை கிடங்கில் அணைய மறுக்கும் தீ 3வது நாளாக 80 தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம் மூச்சு திணறல், உடலில் அரிப்பால் பாதிப்பு

நாகர்கோவில், மார்ச் 17 :  நாகர்கோவில் பீச் ரோடு வலம்புரிவிளையில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்கில் கடந்த 14ம் தேதி தீ பிடித்தது. வெயிலும், காற்றும் வேகமாக இருந்ததால், தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. வழக்கமாக ஒரு பகுதியில் மட்டும் தீ பிடிக்கும். ஆனால் இந்த முறை குப்பை கிடங்கில் குவிந்து கிடந்த குப்பைகள் அனைத்தும் எரியும் வகையில் தீ பிடித்து எரிய தொடங்கியது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு தலைமையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீயின் வேகம் அதிகரிப்பு மற்றும் புகை மண்டலத்தால் தீயணைப்பு வீரர்கள் திணறினர். மேலும் வலம்புரிவிளையை சுற்றி உள்ள பகுதிகளும் புகை மண்டலமாக மாறி, அந்த பகுதியில் இருந்தவர்களும் மூச்சு திணறலுக்கு உள்ளானார்கள். போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. முதல் நாள் தீயை அணைப்பதில் சிரமமாக இருந்ததால், வெளி மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். காலை முதல் இரவு வரை இடைவிடாது போராடியும் தீயை அணைக்க முடிய வில்லை.

நேற்று 3வது நாளாக தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன. 80 தீயணைப்பு வீரர்கள், 8 தீயணைப்பு வண்டிகள், 15 டேங்கர் லாரிகள், 6 பொக்லைன் எந்திரங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை கிளறி, தீ அணைக்கப்படுகிறது. ஆனால் காற்று வேகமாக வீசுவதால் தீ அணைய வில்லை. ஒருபுறம் அணைத்தால், மறுபுறம்  தீ பிடித்து எரிந்து வருகிறது. தீயை  அணைக்கும் பணியில் பல மணி நேரமாக உள்ளதால் தீயணைப்பு வீரர்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். பல தீயணைப்பு வீரர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.  பல்வேறு கழிவுகள் கிடப்பதால் கடந்த இரு நாட்களாக தீயணைப்பு பணியில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சு திணறலுடன், உடலில் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இன்னும் 4 நாட்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. போதிய அளவு தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 15 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆனால் தீயின் வேகத்தை குறைக்க முடிய வில்லை.  வெறும் குப்பைகளாக இருந்தால் எளிதில் அணைக்கலாம். பல்வேறு ரசாயன கழிவுகளுடன், இறைச்சி கழிவுகளும் கலந்து கிடப்பதால், பெரும் துர்நாற்றமும் வீசிய வண்ணம் உள்ளது.

பாம்புகள் படையெடுப்பால் அச்சம்
குப்பை கிடங்கு எரிவதால் அதில் இருந்து  புகை மண்டலம், துர்நாற்றம் வீசுவது ஒருபுறமிருக்க, அதில் கிடந்த பாம்புகள், பூச்சிகள் இடம் பெயர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து வருகின்றன. நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 8 அடி நீள பாம்பு புகுந்தது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள், பாம்பை பிடித்து சென்றனர். பாம்பு அச்சம் காரணமாக மக்கள், எந்த நேரமும் கதவை பூட்டியே வைத்துள்ளனர்.

Tags : Nagercoil ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு