×

பள்ளி பராமரிப்புக்கான அரசு நிதியில் தலைமை ஆசிரியை செக் மோசடி செய்ததாக போலீசில் புகார் தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, மார்ச் 17: தண்டராம்பட்டு அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை செக் மோசடி செய்துள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பள்ளி பராமரிப்பு பணிக்காக அரசு ஒதுக்கிய ₹10 ஆயிரத்திற்கான காசோலையில், பள்ளி மேலாண்மைக்குழு பெண் தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டு வங்கியில் பணத்தை எடுத்துள்ளதாக, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருட்செல்வத்திடம் சமீபத்தில் புகார் செய்யப்பட்டது.
அப்போது, முதன்மைக்கல்வி அலுவலர், பள்ளிக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு கூறி அனுப்பி விட்டாராம். இதையடுத்து, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கடந்த 8ம் தேதி வாணாபுரம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை மீது புகார் செய்துள்ளார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி இருவரையும் அழைத்து நேற்று விசாரணை நடத்தினார். பின்னர், செக் மோசடி குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சதாகுப்பம் அரசு பள்ளியில் பணிபுரியும் 11 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியை தங்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், ஆசிரியர்கள் அனைவரையும் வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யுமாறும் முதன்மைக்கல்வி அலுவலரிடம் மனு அளித்துள்ளார்களாம். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கூறியதுபோல், தலைமை ஆசிரியை செக் மோசடி செய்துள்ளாரா?, மேலும், சக ஆசிரியர்களை தரக்குறைவாக நடத்தியுள்ளாரா? அல்லது முன்விரோதம் காரணமாக தலைமை ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tandarampatti ,Czech government ,
× RELATED அதிமுக ஆட்சியில் நகை, பயிர்க்கடன்...