வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? நாளை அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவு

வேலூர், மார்ச் 17: வேலூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்பதை அறிக்கை நாளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்கான, ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுமையாக செய்யப்பட்டிருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து வருவாய் துறை பிரிவு அதிகாரிகள் கூறுகையில் ‘தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி மையத்துக்கான சாலை வசதி, கழிவறை மற்றும் குடிநீர் வசதி, திடீரென மழை பெய்தால் வாக்காளர்கள் அதிகப்படியானோர் நிற்க முடியுமா? வாக்குச்சாவடி கட்டிடத்தின் உறுதித் தன்ைம உட்பட 28 வகையான அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதன் அறிக்கை நாளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது’ என்றனர்.

Related Stories:

>