×

ராஜபாளையம் தொகுதிக்கு திட்டங்கள் வந்தது யாரால் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா அமைச்சருக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ சவால்

ராஜபாளையம், மார்ச் 17: ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் எம்.எல்.ஏவாக இருக்கும் தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் நகரில் ரயில்வே மேம்பால பணி, பாதாளச் சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்களை தான் கொண்டு வந்ததாக தெரிவித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான தங்கப்பாண்டியன் ராஜபாளையத்தில் நடக்கும் திட்டப்பணிகள் அனைத்தும் எனது முயற்சியால் வந்தவை, இது குறித்து அமைச்சர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விட்டுள்ளார். இது குறித்து திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜபாளையத்தில் நடக்கும் ரயில்வே மேம்பால பணி, பாதாளச் சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை எனது முயற்சியால் சட்டமன்றத்தில் பேசி கொண்டு வரப்பட்டவை. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானதும், அனைத்து பணிகளையும் சிறந்த முறையில் முடிக்கப்படும். பெண்களுக்கான  அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். இளைஞர்களுக்கான அரசு வேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேலைவாய்ப்பு முகாம், தொழில் பூங்கா அமைக்கப்படும். அரசு பொது மருத்துவமனையை  ஹைடெக் முறையில் உயர்த்தப்படும். தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Thangapandian ,MLA ,Rajapalayam ,
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...