×

திருவில்லி.யில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

திருவில்லிபுத்தூர், மார்ச் 17: திருவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  திருவில்லிபுத்தூர் மம்சாபுரம் செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகே திருவில்லிபுத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் மற்றும் சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர்  வாகன சோதனையை மேற்கொண்டிருந்தனர். அப்போது மம்சாபுரத்தில் இருந்து திருவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிக்கனி என்பவர் வங்கியில் செலுத்துவதற்காக ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்தார். தனியார் பள்ளி அருகே பறக்கும் படையினர் அவரை சோதனை செய்தபோது பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை கைப்பற்றியதோடு திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் மற்றும் உதவி அலுவலர் அன்னம்மாள் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பணம் ஒப்படைக்கப்படும்போது வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பால்துரை, வருவாய் ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் ஆகியோரும் உடன் வந்தனர். இந்த தொகை திருவில்லிபுத்தூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி முருகன் கூறும்போது, உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப்படி உரியவரிடம்பணம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : Thiruvilli ,
× RELATED திருவில்லியில் இன்று மின்தடை