கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு உணவு, இருப்பிடம் அளித்தவர்களுக்கு ₹2.25 கோடி வழங்காமல் இழுத்தடிப்பு சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை மீது புகார்

தேனி, மார்ச் 17: கொரோனா பேரிடர் காலத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு உணவு மற்றும் இருப்பிடம் கொடுத்தவர்களுக்கு ரூ.2.25 கோடி வழங்காமல் இழுத்தடிப்பதாக சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை மீது புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச்சில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. தேனி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 202 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டநிலையில், 16 ஆயிரத்து 971 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 297 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்ட அளவில் 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டில் தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம் அரசினர் மாவட்ட தலைமை அரசினர் மருத்துவமனை உள்ளிட்ட 11 மையங்களில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் 15 நாட்கள் தனியார் லாட்ஜூகளில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர். நோயாளிகள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நபர் ஒருவருக்கு தினசரி ரூ.300 மதிப்பிலான உணவு வழங்கப்பட்டது.

மருத்துவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கான உணவு, இருப்பிடம் உள்ளிட்ட செலவின தொகையானது உணவு பாதுகாப்புத் துறையும், நோயாளிகளுக்கான செலவினத்தொகையை சுகாதாரத் துறையும் வழங்கும் என கூறப்பட்டது. இதன்படி, மாவட்ட அளவில் பலர் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கான உணவு செலவுத்தொகை, லாட்ஜ் கட்டணத் தொகை என சுமார் ரூ.2.50 கோடியை அரசு உணவு வழங்கியோர், லாட்ஜ் உரிமையாளர்களுக்கு தரவேண்டியுள்ளது. இதற்கான தொகை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு வந்து 3 மாதங்களுக்கும் மேலாகிவிட்டதாக கூறப்படுகிறது. இத்தொகையை கேட்டுச் செல்லும் உணவு தயாரித்து வழங்கியோர் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்களிடம் கொரோனா காலத்தில் எத்தனை பேருக்கு உணவு வழங்கப்பட்டது. லாட்ஜ்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் தவிர சுகாதார பணியாளர்களுக்கு உணவு வழங்கியதாக கணக்கில் வருகிறது. இதில், மருத்துவத்துறை அனுமதித்த நபர்களின் எண்ணிக்கைக்கும், உணவு வழங்கியதாக கூறப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் மாறுபடுகிறது.

எனவே, இக்கணக்கு முடியும் வரை செலவுத் தொகை தரமுடியாது என சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாக உணவு வழங்கியவர்கள் பணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ரூ. இரண்டரை கோடி வரை பணம் வராமல் தவித்து வரும் வட்டிக்கு வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் சிகிச்சை பெறுவோர் சிகிச்சை அளித்தோர், முன்களப்பணியாளர் என அனைவருக்கும் உணவு, இருப்பிடம் தாராளமாக வழங்க சொன்ன கலெக்டர் பணியிட மாற்றமாகி சென்று விட்டநிலையில், செலவளித்த தொகையை மீட்க முடியாமல் தனியார் லாட்ஜ் உரிமையாளர்கள், உணவு தயாரித்து வழங்கியோர் பெரும் கவலையில் உள்ளனர்

Related Stories:

>