×

வாழ்வில் சிறப்புகள் சேர்க்கும் சித்தாத்தூர் அம்மன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறைய அம்மன் கோயில்கள் உள்ளன. புராண காலந்தொட்டே அம்மனின் அற்புதங்கள் நிகழ்ந்த தலங்கள் இங்கே ஏராளம்! அவற்றுள் “படவேடு ரேணுகாம்பாள்’’ முக்கிய இடம் வகிக்கின்றாள். இந்த அம்பாளைத் தொட்டே அகிலமெங்கும் சிரசு வழிபாடு நடைபெறுகிறது. அப்படிப்பட்ட அன்னையின் அம்சமாக சித்தாத்தூர் என்னும் ஊரில் மாரி என்ற திருப்பெயரால் அம்பிகை இன்றும் அற்புதங்கள் பலவற்றை நடத்தி வருகின்றாள். சித்தர்கள் வாழ்ந்த, வாழும் பூமியாகக் கருதப்படும் இந்த சித்தாத்தூரில், அன்னை ரேணுகை கோயில் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நாகமாக மாறிக் காத்திருந்தாள். ஒருநாள் நாகமாகச் சுற்றிவந்த அம்மனின் நாவில் முள் தைத்தது.  அப்போது வாழைப்பந்தல் எனும் ஊரைச் சேர்ந்த ஒரு பெரியவர் பனை மரத்தடியில் தன் மாட்டை கட்டிவிட்டு, ஓய்வெடுத்தார். அவர் அருகில் வந்த நாகம், ‘‘நான் அம்மன், நாக வடிவில் உள்ளேன். என் நாவில் முள் தைத்துவிட்டது. அதை எடுத்துவிடுவாயா?’’ என்று கேட்டது. உடனெ அந்தப் பெரியவர் எந்தத் தயக்கமோ, பயமோ இல்லாமல், அந்த முள்ளை எடுத்துவிட்டார். படமெடுத்தாடிய அந்த நாகம், அவருடைய வம்சத்தையே தான் காப்பதாக வாக்களித்துவிட்டு மறைந்தது. பின்னர், அந்தப் பெரியவர் குடும்பத்தோடு இங்கே வந்து வாழ ஆரம்பித்தார். அம்மனை நினைத்து பொங்கல் வைத்து வழிபட்டார். பெங்களூரில் வசிக்கும் அந்தப் பெரியவரின் வம்சாவழியினர் இன்றும் இங்கு வரும்போது அம்மனுக்குப் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். குறைவின்றி வாழ்ந்து வருகின்றனர்!

நாகமாக முதலில் இங்கே வாழ்ந்த அன்னை ரேணுகாதேவி, பல காலத்திற்கு முன்பே, கற்சிலையாக புதையுண்டு கிடந்தாள். வயலில் ஏர் உழும்போது ஏர்க் கலப்பையில் தட்டுப்பட்டு வெளிக் கொணரப்பட்டாள். அதுமுதல் அவளிடம் சரணடைந்தோர் வாழ்வில் சாதனைகள் பல புரிந்து வருகிறாள். தமிழ்நாடெங்கிலும் பலருக்கு குலதெய்வமாக இந்த அன்னை திகழ்கிறாள். தம் குலதெய்வம் எதுவென்று அறியாத பலர் கனவில் இந்த மாரி தோன்றி, சித்தாத்தூர் வரும்படிகூறி மறைகிறாள். அதனால் இன்றும் சில பக்தர்கள் தன் குலதெய்வமான இந்த அம்மாவை கண்டுபிடித்துவிட்டதாககூறி மெய்சிலிர்க்கின்றனர். கண்ணீர் மல்க அம்மனை வழிபட்டு ஆனந்தம் அடைகின்றனர். ஊர் எல்லையில் வயல் பரப்பின் நடுவே அற்புதமாக கோயில் கொண்டிருக்கிறாள் அன்னை.

கருவறையுள் சுதை வடிவில் அமர்ந்த அம்மனும், கீழே மூன்று சிரசு அம்மன்களையும் கண்டு வணங்கலாம். இவற்றில் வலப்புறம் இருப்பது வயல்வெளியில் கிடைத்த அம்மனாகும். இந்த தரிசனத்தில் ஏற்படும் பரவசத்தை வார்த்தைகளால் சொல்லி முடியாது. ஆகாய சக்தியெல்லாம் இங்கே ஒன்றுகூட, பார்வதி ஸ்வரூபமாக அருள் மழை பொழிகின்றாள் மாரியம்மன். இவளை எட்டியம்மன் என்றும் அழைக்கின்றனர். எண்ணற்றோர் வாழ்வில் அற்புதங்களையும், திருப்பங்களையும் நிகழ்த்தும் இந்த மாரியம்மனுக்கு, ஆடி வெள்ளிக் கிழமைகளில் மிகவும் விமரிசையாக திருவிழா எடுக்கின்றனர். தை பௌர்ணமியன்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன. இங்குள்ள கிணறு சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த அன்னை கனவில் தோன்றி பொங்கல் வழிபாடு செய்யும்படி கூறியும், அதை அலட்சியப்படுத்தினால் பாம்பாகத் தோன்றி அறிவுறுத்துவாளாம். உடனே அவர்கள் சித்தாத்தூர் வந்து அன்னையை வணங்கி பொங்கல் வைத்து வழிபடுவார்களாம்.

இது இன்றும் நடக்கிறது! அற்புதங்கள் பல நிகழ்த்தி, பக்தர் வாழ்வில் வளம் பெருக வைக்கும் இந்த மாரியம்மனை சரணடைந்து துதிப்போம். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில், ஆரணி – வந்தவாசி பேருந்து சாலையில் ஆரணியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சித்தாத்தூர் அமைந்துள்ளது.

Tags : Sidthathur Amman ,Amman ,Tiruvannamalai district ,Padavedu Renukambal ,
× RELATED மழலை வரம் தரும் மகாதேவி