×

பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி உளவுத்துறையின் அனுமதிக்கு பிறகே பிரசாரத்திற்கு கிளம்பும் அமைச்சர்கள்

பழநி, மார்ச் 17: பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக உளவுத்துறை அனுமதி கிடைத்த பிறகே அமைச்சர்கள் பிரச்சாரத்திற்கு கிளம்புகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எவ்வித வளர்ச்சித் திட்டப்பணிகளும் போதிய அளவு செய்யப்படாததால் ஆளும் அதிமுக அரசின் மீது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் காரணமாக பிரச்சாரத்திற்கு செல்லும் அதிமுக அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர்களுடன் கூட்டணி அமைத்ததாகக் கூறி பல இடங்களில் தொகுதிக்குள் நுழைய அனுமதிக்காமல் விரட்டி அடிக்கின்றனர். இதனால் ஆளும்தரப்பினர் செய்வதறியாமல் திகைத்து போய் உள்ளனர்.

இந்நிலையில் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்கள் குறித்து ஆளும்தரப்பினர் முதல்நாளே உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விடுகின்றனர். உளவுத்துறை டீம் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து எதிர்ப்புகள் இருக்காது என்பதை உறுதி செய்து, இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட ஆளும்தரப்பு நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கின்றனர். அதன்பின்பே அந்த இடத்திற்கு பிரச்சாரத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு பயந்து ஆளும்தரப்பு நிர்வாகிகள் மேற்கொள்ளும் இந்த மான் கராத்தே தந்திரம் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Anti-Public ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...