×

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் காமராஜ் வேட்பு மனு தாக்கல்

திருவாரூர், மார்ச் 16: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எம்எல்ஏ தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவும், உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் திமுக சார்பில் குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிராமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் காமராஜ் நேற்று தனது வேட்பு மனுவை நன்னிலம் தாலுகா அலுவலகத்தில் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான பானுகோபனிடம் தாக்கல் செய்தார். அவருடன் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் வேணுபாஸ்கரன், பாஜக மாவட்ட தலைவர் ராகவன் ஆகியோர் சென்றனர். முன்னதாக அங்குள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தாலுகா அலுவலகம் வரையில் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் அமைச்சர் காமராஜ் கூறுகையில், இந்த தொகுதியில் ஏற்கனவே 2வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொகுதி மக்களின் குறைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. முதல் முறையாக போட்டியிடும் போது 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும், 2016ம் ஆண்டில் 2வது முறையாக போட்டியிட்டபோது 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற செய்தனர். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆசியுடனும், தற்போதைய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் வாழ்த்துக்களோடு 3வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளேன்.

இந்த முறையும் இந்த தொகுதியில் மக்கள் என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காரணம் செல்லுமிடமெல்லாம் மீண்டும் நீங்கள்தான் வெற்றி பெற போகிறீர்கள். உங்களுக்கு தான் எங்கள் வாக்கு, உங்கள் உடல் நலத்தை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று பிரசாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் என்னை வாழ்த்தி அனுப்பி வைக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே அவர்களுடைய ஆசியோடு மீண்டும் வெற்றி பெற்று தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் தமாகா மாவட்ட தலைவர் தினகரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஆரோக்கியசெல்வம், அதிமுக அமைப்பு செயலாளர் கோபால், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், அன்பு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Nannilam ,AIADMK ,Minister ,Kamaraj ,
× RELATED அனல் பறக்கும் பிரசாரத்தில்...