×

ஆரணி, சேத்துப்பட்டில் இருசக்கர வாகனங்களை திருடிய ஆசாமிகள்: சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரல்

 

சேத்துப்பட்டு, ஜூலை 28: ஆரணி, சேத்துப்பட்டில் இருசக்கர வாகனங்களை ஆசாமிகள் திருடிச்சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா, பின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(60), விவசாயி. இவர் கடந்த 25ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டிற்கு மாட்டு தீவனம் வாங்க தனது இருசக்கர வாகனத்தில் வந்திருந்தார். தீவனம் வாங்கிய பின்னர், செஞ்சி சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் தேநீர் அருந்தச் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது, நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர் திருடிச்சென்றிருந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மர்மநபர் இருசக்கர வாகனத்தை திருடிச்செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் வாகனத்தை திருடும் வாலிபர் பேக்கரியில் இருந்து வெளியே வந்து, சிறிது நேரம் சுற்றுப்புறத்தை நோட்டமிட்டு, பின்னர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போளூர் மற்றும் சேத்துப்பட்டு பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பகல், இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளை முகமூடி ஆசாமிகள் திருடிச் செல்லும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, ஆரணி அடுத்த இபி நகர் சாய்ராம் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன்(38), சலவை தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தியுள்ளார். நேற்று அதிகாலை பார்த்தபோது மொபட்டை மர்மநபர் திருடிச்சென்றிருந்தார். அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, தொப்பி மற்றும் முகமூடி அணிந்து மர்ம ஆசாமி ஒருவர் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் நீலகண்டன் நேற்று கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பைக் திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மொபட்டை மர்ம நபர் திருடிச்செல்லும் சிசிடிவி வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாதத்தில் 20 பைக்குகள் திருட்டு
ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் பகல், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடு, கடைகள், அலுவலகம் முன்பு நிறுத்தப்படும் பைக், மொபட்களை மர்ம ஆசாமிகள் மற்றும் மூகமுடி கொள்ளையர் திருடிச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதன்படி, இபி நகர் பகுதியில் மட்டும் கடந்த ஒரு மாத்தில் மட்டும் வீட்டின் முன்று நிறுத்தி வைத்திருந்த பொதுமக்களின் 20 பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். எனவே ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்று, தொடர் பைக் திருடும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Arani, Sethupat ,Assamese ,Arani ,Chatupat ,Krishnamoorthy ,Binnaur Village, Viluppuram District, Malmalayanur Taluga ,Tiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை காப்புக்காடு பகுதியில்...