×

வடுவூர் வடபாதியில் மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி

மன்னார்குடி, மார்ச் 16: வடுவூர் வடபாதி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருவாரூர் மாவட்டம் அமெச்சூர் கபடி கழகத்தின் அங்கீகாரம் பெற்ற டெல்டா கபடி கழகத்தின் சார்பில் 85 கிலோ எடை பிரிவில் 4ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டிகள் மன்னார்குடி அருகே வடுவூர் வடபாதி உள்விளையாட்டு அரங்கில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.

இதில், சென்னை, கோவை, கன்னியாகுமரி, ெநல்லை, மதுரை, மத்திய கலால் துறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 அணிகள் பங்கேற்றன. இரவு பகலாக நடந்த இப்போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த அரையிறுதி போட்டிகளில் சென்னை ஜெயின் கல்லூரி அணி கரியாபட்டி தஞ்சை அணியையும், சென்னை மத்திய கலால்துறை அணி ஒக்கநாடு மேலையூர் முருகானந்தம் மெமோரியல் அணியையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதி போட்டி நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில் சென்னை ஜெயின் கல்லூரி அணி, சென்னை மத்திய கலால்துறை அணியை 21க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மாநில அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திருவாரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராஜராஜேந்திரன், துணைத் தலைவர் பொன் கோவிந்தராஜ், ஓய்வு பெற்ற டிஎஸ்பி கணேசமூர்த்தி, இந்திய கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் உள்ளிக்கோட்டை பாலா, அரவிந்த் அண்ணாதுரை, மாநில ஹாக்கி விளையாட்டு கழக தலைவர் சேகர், மதுரை மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் வல்லத்தரசு, தஞ்சை மாவட்ட அமைப்பு செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் பங்கேற்று கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை டெல்டா கபடி கழக நிர்வாகிகள் அறிவுநிதி, செல்வகுமார், சந்திரசேகர், மருது ஆகியோர் செய்திருந்தனர். இரவு பகலாக நடந்த மா நில அளவிலான கபடி போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்தனர்.

Tags : Vaduvoor North ,
× RELATED வடுவூர் வடபாதியில் மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி-சென்னை அணி சாம்பியன்