தஞ்சையில் மக்கள் வசிக்கும் இடத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு திமுக வேட்பாளர் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தஞ்சை, மார்ச் 16: தஞ்சாவூரில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் அதிகாரிகளுடன் தொலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். தஞ்சாவூர் கண்ணன் நகர் குடியிருப்பு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ. 75 லட்சம் செலவில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான டிகேஜி நீலமேகம் நேற்று அங்கு சென்று, மக்களிடம் குப்பை தரம் பிரிக்கும் மையம் தொடர்பாக கேட்டறிந்தார்.

பின்னர் தொலைபேசியில் மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் பேசி குப்பைகள் தரம் பிரிக்கும் மையம், மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைவதால் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. துர்நாற்றம் ஏற்பட்டால் தொற்றுநோய் பரவும், எனவே இதனை அடியோடு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அப்போது அதிகாரிகள் பணிகள் தொடங்கியதால் நிறுத்த முடியாது என கூறியதால், ஆத்திரமடைந்த டி.கே.ஜி.நீலமேகம், இன்னும் 15 தினங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என கூறி அதிகாரிகளிடம் பேசி போனை வைத்து விட்டார்.

பின்னர் நிருபர்களிடம் நீலமேகம் கூறியதாவது, தஞ்சாவூரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது முறையாக நிதி செலவிடப்படவில்லை. தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 15 இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுகிறது, இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் என அச்சப்படுகின்றனர்.

எனவே இதனை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினோம் . அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டுள்ளனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி 20% கமிஷன் பெற்றுக்கொண்டு இந்த திட்டத்தை அமல் படுத்தி உள்ளார். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வந்ததும், மக்களுக்கும் தொல்லைகள் தரும் இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என தெரிவித்தார்.

Related Stories:

>