அரிமளம், திருமயம் பகுதியில் ஓட்டல், இறைச்சி கடைகளின் கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பதால் சுகாதார கேடு

திருமயம், மார்ச் 16: அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள நீர் நிலைகள், வரத்து வாரிகளை மையமாக கொண்டு செயல்படும் ஓட்டல், இறைச்சி கடைகள் வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம், சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட சிற்றுண்டிகள், ஓட்டல்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவுகள் உண்டு வருகின்றனர். இவற்றில் பெரும்பாலான ஓட்டல்கள் நீர் நிலைகள், வரத்துவாரிகளை ஒட்டியே காணப்படுகிறது.

இந்நிலையில் ஓட்டல்களில் வீணாகும் கழிவு பொருட்கள், காய்கறிகள், கெட்டுப்போன உணவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த நீர் நிலைகள், வரத்துவாரிகளை குப்பைதொட்டி போல் ஓட்டல் உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணமாக ஓட்டல் சமையல் அறையில் வீணாகும் நீர் நேரடியாக நீர் நிலையில் கலக்குகிறது. அதே போல் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டு கை கழுவும் நீரும் நீர்நிலை, வரத்து வாரியில் திறந்துவிடப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் நீர் நிலைகள், வரத்து வாரிகள் மாசடைந்து வருவதோடு துர்நாற்றம் வீச தொடங்குகிறது. இதனிடையே அரிமளம், திருமயம் பகுதியில் கடந்த சில வருடங்களாக பருவ மழை சரிவர பெய்யாததால் விவசாயிகள் விளை நிலங்கள், நீர் நிலைகள், வரத்து வாரிகளை பராமரிக்காமல் கைவிட்டதால் ஓட்டல் உரிமையாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கழிவுகளை நீர் நிலைகளில் கலந்து விடுகின்றனர். இதனால் நீர் நிலையில் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புள்ளதோடு நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளும் நீர் நிலைகள், வரத்து வாரிகள் ஒட்டியே செயல்படுகிறது. இவைகள் இறைச்சி கழிவுகளை நீர் நிலைகளில் கலந்து விடுகின்றனர். மாவட்ட நிர்வாகமும், வட்டார சுகாதார துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள ஓட்டல், சிற்றுண்டிகள், இறைச்சி கடைகளை ஆய்வு செய்து முறையாக கழிவு மேலாண்மை நடைபெறுதை உறுதி செய்ய வேண்டும். இல்லாத கடைகளுக்கு கால அவகாசம் வழங்கி கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>