×

ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் விதிகளில் மாற்றம்..! WCR மண்டலத்தில் அறிமுகமாகும் புதிய டோக்கன் சிஸ்டம்…

ஜபல்பூர்: இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே (WCR) மண்டலம், வரும் ஆகஸ்ட் 1 முதல் முன்பதிவு மையங்களில் (PRS counters) தட்கல் டிக்கெட் வாங்குபவர்களுக்காக ஒரு புதிய டோக்கன் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், முறைகேடாக டிக்கெட் வாங்கும் இடைத்தரகர்களைத் தடுக்கவும் புதிய டோக்கன் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கும் முன்பே பயணிகள் தங்கள் வரிசையை உறுதிசெய்யும் வகையில், தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் முன்னதாகவே வழங்கப்பட உள்ளது.

ஏசி தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரையிலும், ஏசி அல்லாத (ஸ்லீப்பர்) தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் காலை 9:00 மணி முதல் 9:30 மணி வரையிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஏசி தட்கல் முன்பதிவு காலை 10:00 மணிக்கும், ஸ்லீப்பர் தட்கல் முன்பதிவு காலை 11:00 மணிக்கும் தொடங்கும்.

ஒவ்வொரு முன்பதிவு மையத்திற்கு வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கையையும் ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மையத்திலும் ஏசி (AC) தட்கல் டிக்கெட்டுகளுக்கு 10 டோக்கன்களும், ஏசி அல்லாத தட்கல் டிக்கெட்டுகளுக்கு 15 டோக்கன்களும் மட்டுமே வழங்கப்படும்.

ஆகஸ்ட் 1 முதல் அறிமுகமாகவிருக்கும் புதிய டோக்கன் முறையின் மூலம் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளுக்காக முன்பதிவு மையத்திற்குத் திரும்பத் திரும்பச் செல்ல வேண்டியிருக்காது. முன்கூட்டியே டோக்கனைப் பெற்றுக்கொள்வதன் மூலம், அவர்கள் தகுந்த நேரத்தில் தங்கள் முறைக்காகக் காத்திருக்கலாம்; மேலும், முன்பதிவு மையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலும் குறையும் என ரயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த டோக்கன் முறை மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் எந்த அளவு வெற்றிகரமாக செயல்படுகிறது என்று ரயில்வே வாரியம் கண்காணிக்கும். பின்னரே நாடு முழுவதும் உள்ள பிற 18 ரயில்வே மண்டலங்களில் இந்த முறையை படிப்படியாக அறிமுகப்படுத்த கூடும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags : WCR ,Jabalpur ,West Central Railway ,Indian Railways ,
× RELATED வளைகுடா நாடுகளில் பணிபுரிவோரில்...