×

தாம்பூலத்தை தாங்கிய முருகப் பெருமான்!

இதிகாச புராணங்களில் மட்டும்தான் தெய்வம் நேருக்கு நேராக வரும். பக்தர்களிடம் பேசும்; அவர்களுக்கு அருள் புரியும். இப்போதெல்லாம் நடக்குமா என்ன? இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவைகள் எல்லாம் என்றும் நடக்கும். எப்போதும் நடக்கும்; எங்கும் நடக்கும். அதிசயம் அநேகமுற்ற பழனிமலை என்று அருணகிரிநாதரால் பாடப்பட்ட பழனியில் நடந்த நிகழ்ச்சி இது. அதுமட்டுமல்ல, அருணகிரிநாதரின் பாடலுக்காகவே ஆறுமுகன் தன்னை வெளிப்படுத்திய நிகழ்ச்சி இது.
சண்முக வடிவு என்பவர் பழனியில் வாழ்ந்து வந்தார். பெயருக்கு ஏற்றபடி அழகே ஒரு வடிவம் கொண்டு வந்ததைப் போல மிகுந்த அழகு கொண்டவராக இருந்தார். அழகு உள்ள இடத்தில் குணம்இருக்காது என்பார்கள்.

சண்முகவடிவு அதையும் பொய்யாக்கினார். சண்முகவடிவு, நற்குணங்களின் நாயகியாக விளங்கினார். “முருகா’’ என்றால் போதும். அவருக்கு உள்ளம் உருகிக் கண்களில் கண்ணீர் பெருகிப்பாயும்; மேனி எல்லாம் சிலிர்க்கும். அவரது முன்னோர்கள் எல்லாம் பழனி மலை முருகன் கோயிலில், சுவாமிக்குக் குடை விளக்கு எடுத்தல், ஆடல் பாடல் முதலான திருத்தொண்டுகளைச் செய்து வந்தார்கள். அதையே பின்பற்றி சண்முகவடிவும் பழனிமலைப் பரமனுக்கு பக்தியோடு திருத்தொண்டு செய்து வந்தார். அதிகாலையில் எழுவது, ஆத்மார்த்தமாக நீராடுவது, நெற்றியில் திருநீறு அணிந்து கொள்வது, பழனி மலையை வலம் வந்து மலை ஏறுவது, கல்லையும் கனியச் செய்யும் குரலில் பக்தியோடு பாடுவது என்பவை, சண்முக வடிவின் அன்றாடக் கடமைகளாக இருந்தன.

சண்முகநாதன்சந்நதியில் சண்முகவடிவு பாடும்போது, அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களையே பாடுவார். அவர் பாடும் பொழுது, அது ஏதோ இன்னிசை அரங்குகளில் கைத்தட்டலுக்காகவோ, பேருக்கும் புகழுக்கும் பாடுவதைப் போலவோ இருக்காது. சண்முக வடிவு அனுபவித்துப் பாடும்போது இதயம் இளகிக் கண்ணீர் வழியும்; மெய்சிலிர்க்கும். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, இவ்வளவு பக்தி பூர்வமாக இனிமேல் யார் பாடுவார்கள்? என்று அனைவருமே ஆனந்தப் படுவார்கள். சண்முகவடிவு பாடும்போது பல சமயங்களில் பன்னிரு கைப்பரமனின் புன்முறுவல் புரியும் முகம் அவர் எதிரில் தோன்றுவதும் உண்டு. பாடி முடித்து அவர் திரும்பும் போது, அவர் முகத்தில் ஒரு புதுவிதமான தெய்வீக ஒளி வீசும்.

அப்போது அவர் பேசும் போது அவர் சொல்லில் தெய்வச்சுவை தோன்றும். அதன் காரணமாகவே அந்த ஆலயத்தில் பணி புரியும் அர்ச்சகர் முதல் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் ஆண்டிகள் வரை அனைவரும் சண்முகவடிவை உத்தமமான முருகன் அடியாராகவே எண்ணி அன்புசெலுத்துவார்கள்.

அவரைப் பார்ப்பவர்கள் அவர் அழகில் வசப்படாமல் அவர் அருள் பொலிவால் நல்லறிவு பெற்று, அவரிடம் பயம் கலந்த அன்போடு நடந்து கொள்வார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சண்முகவடிவு ஆறுமுகனின் அருள் ஆடலில் சந்தேகப்படுபவர்களுக்குக் கூடத் தகுந்த முறையில் விளக்கும் ஆற்றலைக் கொண்ட அடியாராய் விளங்கினார். அப்படிப்பட்ட சண்முகவடிவு பெருமையை அனைவரும் அறிய வேண்டாமா? எதிர்காலத்தலைமுறை உணர வேண்டாமா? அதற்கான திருவிளையாடலை முருகப் பெருமான் அங்கே பழனியில் நிகழ்த்தத் தொடங்கினார்.

கார்த்திகைத் திருநாள்! ஆலயங்களில் எல்லாம் ஆறுமுக வள்ளல் அலங்கார பவனி வரும் திருநாள் அது. பழனி மலைநாதன் அன்று தங்கமயில் வாகனத்தில் சிங்காரமாய் எழுந்தருளினார். மலைக்கோயிலின் நான்கு புறங்களிலும் இறைவன் வரும்போது, ஒவ்வொரு மூலையிலும் சண்முகவடிவு பரத நாட்டியம் ஆடுவார். நடைமுறையில் பார்க்கும்போது நாட்டியம் ஆடுபவர்கள் பாடமாட்டார்கள். பின்னணி இசை பக்கவாத்தியங்கள், பின்னணிப் பாடகர்கள் ஆகியோர் இசைத்து பாடிக்கொண்டிருப்பார்கள்.

அதற்குத் தகுந்தாற்போல பரதநாட்டியம் ஆடுபவர் ஆடுவார். ஆனால், சண்முகவடிவு பக்கவாத்தியம், பின்னணிப் பாடகர்கள் ஆகியவற்றை வைத்துக்கொள்ள மாட்டார். முருகப் பெருமான் திருவுலா மலைக்கோயிலின் வடக்கு மூலை அருகில் வந்தது. சண்முகவடிவு சுவாமியை வணங்கி எழுந்தார்; முருகப் பெருமானின் வேல் தாங்கிய திருக்கரம், தண்டையணிந்த தாமரைத் திருவடிகள், திருவடிகளைத் தாங்கிய மயில், அதன் விரிந்த தோகை என முருகனை முழுவதுமாகத் தரிசித்த சண்முகவடிவுஉலகையே மறந்தார். முதல் வணக்கம் செலுத்தி முருகனை நிமிர்ந்து பார்த்தார். கண்கள் கந்தனையே பார்த்துக் கொண்டிருந்தன. அவரது கால் சிலம்புகள் `கலீர் கலீர்’ என ஒலித்தன. சித்திர கவித்துவ சத்த மிகுந்த திருப்புகழை அவர் பாடி ஆடத் தொடங்கினார். அன்று `வங்கார மார்பிலணி’ எனும் திருச்செங்காட்டங்குடி திருப்புகழைப்பாடினார். அப்பாடலில்…

“சிங்கார ரூப மயில் வாகன நமோ நமென
கந்தா குமார சிவ தேசிக நமோ நமென
செந்தூரப் பார்வதி சுதாகர நமோ நமென’’

– என்ற வரிகளைப் பாடும்போது சண்முகவடிவு முழுமையாகத் தன்னிலை மறந்தார்.

அவ்வரிகளையே திரும்பத் திரும்பப் பாடியபடி ஆடிக்கொண்டிருந்தார். அவர் நடனத்தில் என்றும் இல்லாத ஓர் அழகும் பாவமும் பொலிந்தன. பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பரவச நிலையில் அப்படியே அசைவற்று நின்று விட்டார்கள். மாலை 7 மணிக்குத் தொடங்கிய ஆட்டம் இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் நிற்கவில்லை. அப்போது… ஆலய அதிகாரி மெள்ள வந்து, நாதஸ்வரக்காரரிடம் வாத்தியம் ஒலிக்கச் சொன்னார்.

தவில் தட்டப்பட்டு, நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. சண்முகவடிவின் ஆட்டம் நின்றது. அவர் சாமி ஆடி ஓய்ந்தவரைப்போலக் கண்களை மூடி, அப்படியே தரையில் சாய்ந்தார். அவரை ஒரு பக்கமாகக் கொண்டு போய் முகத்தில் தண்ணீர் தெளித்து விசிறி, கொஞ்சம் குடிநீரைத் தந்து குடிக்கச் செய்தார்கள்.அதன் பிறகு மற்றைய மூலைகளில் சண்முகவடிவின் நடனம் நடைபெறவில்லை. திருவுலா முடிந்து முருகப் பெருமான் கோயிலில் தன்னிலை அடைந்தார். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு, எல்லோரும் மலையைவிட்டுக் கீழே இறங்கினார்கள். சண்முகவடிவு மட்டும் மலை மேல் இருந்தார். ஓரளவிற்கு மெள்ளத் தன்னிலை அடைந்த அவர், சுற்று முற்றும் பார்த்தார். நேரம் நள்ளிரவைத் தாண்டி இருந்தது.

எங்கும் ஒரே இருட்டு. “நேரம் கடந்து போய்விட்டது. இந்த இருட்டில் எப்படித் தனியாகப் போவது?’’ என்று ஒரு சில வினாடிகள் சிந்தித்தசண்முகவடிவு, “வேலும் மயிலும் துணை இருக்க வேறு துணை எதற்கு?’’ என்று சொல்லியபடியே எழுந்தார். கொடி மரத்தருகில் வந்து வணங்கி, “முருகா! வேலும் மயிலும் துணை!’’ என்றபடியே மலையிலிருந்து இறங்கத் தொடங்கினார். சண்முகவடிவுக்கு இசைப்பயிற்சி தொடங்கிய நாளிலிருந்து வெற்றிலை பாக்கு போடும் பழக்கமுண்டு. அதனால், ஓரிடத்தில் சற்று நின்று, வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு, அதை மென்றபடியே வழி நடந்தார். நடக்கும்போதுதான் அவருக்கு நினைவு வந்தது;“மலை மேல் பாடிய திருப்புகழை முழுமையாகப் பாடவில்லை. பாதி பாடும் போதே மயக்கம் போட்டு விழுந்து விட்டோம். ஆகையால் அந்தப் பாடலை இப்போது முழுமையாகப்பாடி விடலாம்’’ என எண்ணிய சண்முகவடிவு, திருப்புகழ் பாடலைப் பாடியபடியே வழி நடந்தார்.

இடையில் அவ்வப்போது வாயில் உமிழ் நீர் சேர்ந்ததும், திரும்பி ஒரு பக்கமாக துப்பினார் சண்முகவடிவு. இவ்வாறு அவர் துப்பும் போது, ஜரிகை கரை போட்ட வெள்ளை மேலாடை காட்சி அளித்து மறைந்தது. பாட்டிலேயே கவனம் பதிந்திருந்ததால் சண்முகவடிவு அதைக் கவனிக்கவில்லை. பாட்டு முடிந்தது. மலை பயணமும் முடிந்தது. சண்முகவடிவு வீடு அடைந்தார். அன்று விரத நாளாக இருந்தபடியால் கொஞ்சமாக பாலும் பழமும் அருந்தினார்.

பழனி ஆண்டவர் படத்தை நெருங்கி, இறைவன் திருவடிகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு, சிறிதளவு அபிஷேக விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டார். அதன் பிறகு, கைகளைக் குவித்தபடியே “சிங்கார ரூப மயில் வாகன’’ என்று சொல்லிவிட்டுப் படுத்து உறங்கினார்.

மறுநாள் பொழுது விடிந்தது. அதிகாலையில் எழுந்து தன் கடமைகளை முடித்துக்கொண்டு, சண்முகவடிவு விழா பூஜைக்காக வேகவேகமாக மலை ஏறினார். பழனி ஆண்டவர் கோயிலில் பூஜை செய்யும் குருக்கள், கருவறை கதவைத் திறந்தார். அங்கிருந்த தூண்டா விளக்கு என்றுமில்லாத திருநாளாக பேரொளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

குருக்கள் இன்னும் சற்று நெருங்கினார். ஆனால்… திடீரென்று குருக்கள் முகத்தில் அதிர்ச்சி பரவியது. அவர் கால்கள் கட்டிப்போட்டாற்போல நின்றன. காரணம்? அங்கே கருவறையில் இருக்கும் ஞானப்பழனி ஆண்டவர் ஜரிகை கரையுடன் கூடிய பட்டு ஆடைகளுடன் விளங்கினார். அந்தப் பட்டாடை முழுவதும் ஒரே தாம்பூல எச்சிலாக இருந்தது.அதைப் பார்த்து அர்ச்சகருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

“என்ன விபரீதம் இது?’’ என்று கத்தியபடியே கருவறையை விட்டு வெளியேறி ஓடினார்; அதிகாரியிடம் சென்று நடந்ததைக்கூறினார். அதற்குள் செய்தி, காட்டுத்தீயை போல எங்கும் பரவியது. விழா பூஜைக்காக வந்தவர்களுடன் ஊர் பொதுமக்களும் கூடிவிட்டார்கள். முருகப் பெருமானின் பட்டாடையில் தாம்பூல கரையை கண்டார்கள். அந்த நேரத்தில் சண்முகவடிவும் அங்கு வந்து சேர்ந்தார். பார்த்ததும் அவரும் பதறினார்;

“அலங்காரன் திருமேனி இப்படி அலங்கோலம் ஆகலாமா?’’ என்று துடித்தார். அப்போது அங்கிருந்த அனைவரும்கேட்கும்படியாக, “அன்பர்களே! உத்தமியான இந்த சண்முகவடிவு நம் மீது மிகவும் அன்பு கொண்டவள். இவள் நேற்று இரவு நாம் உலா வந்த போது ஆடிப் பாடினாள். பாட்டு முடியவில்லை பாதியிலேயே நின்றுவிட்டது. மலையிலிருந்து இவள் தனியாகக் கீழே இறங்கிப் போகும்போது நாமே இவளுக்குப் பின்னால் துணையாகச் சென்றோம்.

அவ்வாறு போகும்போது மலையின் மேல், பாதிப்பாடலைப் பாடி நிறுத்தியிருந்த திருப்புகழ் பாடலை பாடிக் கொண்டே போனாள் இவள். இடை இடையே இவள் உமிழ்ந்த தாம்பூல எச்சில், தேனூறு கவியான திருப்புகழ் கலந்ததாதலால் அதைக் கீழே விழாதபடி நம் ஆடையில் ஏற்றோம். திருப்புகழ் பாடும் சிந்தனையிலே இருந்த சண்முகவடிவு இடை இடையே நம் பட்டாடை தெரிந்தும் அதைப் பார்க்கவில்லை. சண்முகவடிவின் தனிச் சிறப்பையும், அருணகிரிநாதரின் திருப்புகழில் நமக்குள்ள விருப்பத்தையும் உலகத்தவர்க்கு அறிவிக்கவே, தாம்பூலக்கறை படிந்த ஆடையுடன் நாம் நின்றோம்’’ என்று ஓர் அசரீரி கேட்டது.

அனைவரும் சண்முக வடிவைப்போற்றி, அவருக்கு அருள் செய்த ஆறுமுகனின் கருணையையும் போற்றினார்கள். உள்ளத் தூய்மையோடு திருப்புகழ் பாடும் பணியோடு ஆடல் தொண்டும் நீண்ட நாள் செய்து வந்த சண்முகவடிவு, முருகப் பெருமான் திருவடிகளை அடைந்தார். (சண்முகவடிவின் காலம் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)

பி.என்.பரசுராமன்

Tags : Murugab ,
× RELATED பேச்சுக்குறை போக்கும் பத்ரகாளி அம்மன்!