×

தொடரும் சாலை விபத்து வேகத்தடை அமைக்க கோரி மறியல்

பொங்கலூர், மார்ச் 16: தொடரும் சாலை விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் பல்லடம் மங்கலம் சாலையில் கல்லம்பாளையத்தில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். பல்லடம் மங்கலம் சாலையில் கல்லம்பாளையம் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவ்வழியே சென்ற கார் ஒன்று சாலையோரம் நடந்து சென்ற சிறுமி மீது மோதி நிற்காமல் அருகில் இருந்த வீட்டுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10 வயது சிறுமி சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து அப்பகுதியினர் கல்லம் பாளையம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் பேரிகார்டு அமைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் சைக்கிளில் சென்ற ஒருவர் பேரிகார்டு மீது மோதி படுகாயமடைந்தார். இதையடுத்து அப்பகுதியினர் இரண்டாவது முறையாக வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக போலீசார் உறுதி அளித்திருந்தனர். இதனிடையே மீண்டும் அதே பகுதியில் நேற்று மாலை பேரிகார்டு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுப்பிரமணி என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அப்பகுதியினர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 இதையடுத்து இப்பகுதியில் தொடர் விபத்துகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் நேற்று 300க்கும் மேற்பட்டோர் பல்லடம் மங்கலம் சாலை கல்லம்பாளையம் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மூன்று இடங்களில் வேகத்தடை அமைக்கும் வரை மறியலை கைவிட மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   இதையடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்திற்குள் அப் பகுதியில் 3 இடங்களில் வேகத்தடை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Cory ,
× RELATED வருமான வரித்துறையினரை தாக்கியதாக...