×

சங்கராபுரம் அருகே நடுரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி கைது: இணையத்தில் வீடியோ வைரல்

 

சங்கராபுரம், ஜூலை 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலேரி பகுதியை சேர்ந்தவர் முத்தையன். இவர் நேற்று குடி போதையில் அப்பகுதியில் உள்ள நான்குவழிச் சாலையில் கட்டிலைப் போட்டு ஜாலியாக படுத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த வழியே வந்த பேருந்துகள், கார்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களும் வரிசையாக அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்போது அவரிடம் தம்பி எழுந்திருப்பா.. வழி விடுப்பா.. என வாகன ஓட்டிகள் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும், போதை ஆசாமி கட்டிலை விட்டு நகரவே இல்லை. நான் இங்கதான் படுப்பேன் என பிடிவாதம் பிடிக்க, பொறுமை இழந்த வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கொதித்தெழுந்து, அவருக்கு சிறப்பு கவனிப்பாக தர்மஅடி கொடுத்து, கட்டிலோடு சேர்த்து தூக்கிச் சாலையோரத்தில் வீசியெறிந்தனர்.

பொதுமக்களின் அதிரடியைத் தொடர்ந்து, ஆசாமி திடீரென ஓட்டம் பிடிக்க, ஸ்தம்பித்திருந்த போக்குவரத்து மெதுவாக சீரடைந்தது. நடுரோட்டில் கட்டிலை போட்டு ரகளை செய்த ஆசாமிக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த இந்த சம்பவம் முழுவதையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சங்கராபுரம் போலீசார் பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்தையனை கைது செய்தனர்.

Tags : Sankarapuram ,Muthaiyan ,Meleri ,Kallakurichi district ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...