×

கட்சி மூலமாக 5 பைசா கூட சம்பாதிக்கவில்லை; சொந்த பணத்தைத்தான் கட்சிக்கு செலவு செய்கிறேன்: புதுச்சேரி மகளிர் காங். தலைவி குமுறும் ஆடியோ வைரல்

 

புதுச்சேரி, ஜூலை 27: புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா. கட்சி வழங்கிய பணத்தை இவர் செலவு செய்யவில்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தகவல் பரப்பினர். இதற்கு பதிலடியாக மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா, ஆடியோவில் பதிவு ஒன்ைற வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: சிலர் என்னை பற்றி வதந்தி பரப்புகின்றனர். பணத்தை பாக்கெட்டில் போட்டு கொண்டு யாருக்கும் கொடுக்காமல் இருந்தேன் என்று சொல்கின்றனர். இந்த வதந்தியை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எதிரியாக இருந்தால் என்னிடம் நேரில் பேச வேண்டும். கட்சிக்கு செலவு செய்யும்போது யாரும் பணம் தந்து செலவு செய்ய சொல்லவில்லை. நான் தான் சொந்த பணத்தை செலவு செய்கிறேன்.

மகிளா காங்கிரஸ் தலைவி ஆகும் முன்பும், பின்னும் நான் தான் செலவு செய்கிறேன். யாரோ கட்சி எனக்கு ரூ.2 லட்சமோ ரூ.30 லட்சமோ தந்ததாக சொன்னாங்க. கட்சி ரூ.5 லட்சம் தந்தது உண்மை. அந்த பணத்தை வைத்து ஆட்களை அழைத்துவர சொன்னார்கள். ஆனால் மேற்கொண்டு ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை எனது கைக்காசு போட்டு செலவு செய்தேன். தினந்தோறும் இந்த பணத்தை ஐயாவிடம் (மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.) கேட்கிறேன். அஞ்சலி உங்களை கைகாட்டி சென்று விட்டார் என என் பணத்தை தர தினமும் கேட்கிறேன். எனக்கு கட்சி சீட் தரவில்லை. கட்சி மூலமாக நான் எந்த 5 பைசாவும் சம்பாதிக்கவும் இல்லை. இன்று வரை என் கைக்காசைதான் செலவிடுகிறேன்.

யாரிடமும் ஸ்பான்சர் வாங்காமல் மகளிர் காங்கிரசை நெஞ்சை நிமிர்த்தி நடத்தி வருகிறேன். கட்சி தலைவரிடம் சென்று கேட்டு, எனக்கு கட்சி தலைமை கொடுக்க வேண்டிய ரூ.7 லட்சம் வாங்கி தந்து விட்டு பேசுங்கள். என் நஷ்டத்தை யாராவது ஈடுகட்ட முடியுமா? தலைவர் ராகுல் வந்தபோது ஆள் கூட்டியதற்கு தந்த பணம் தரவில்லை. கட்சி தலைமை தர வேண்டிய பணத்தை வாங்கி தந்து விட்டு வதந்தி பேசுங்கள். பிரசார வண்டி வைத்துள்ளேன். வந்த நிர்வாகிகளுக்கு இடவசதி செய்து கொடுத்துள்ளேன். நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கில் ஆட்களை கூட்ட செலவு நான் செய்தேன். கட்சியோ, தலைவர்களோ, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை. எல்லா செலவையும் ஒத்த ஆளாக, பொம்பளையாக நின்று நான் தான் செலவு செய்துள்ளேன். என்னை பற்றி சந்திரிகாவிடம் சொன்னவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்.

இவ்வாறு ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆடியோ குறித்து நிஷா கூறும்போது, கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் வதந்தி பரப்பினர். இதனால் மகிளா காங்கிரஸ் குழுவில் கட்சியினருக்கு உண்மையை தெரிவிக்க ஆடியோ பதிவு செய்தேன். பொது வெளியில் பகிரவில்லை. நான் கட்சியில் பணம் வாங்கவில்லை. எந்த நிகழ்வு என்றாலும், நிகழ்ச்சி நடத்தினாலும் என் சொந்த பணத்தைத்தான் செலவு செய்து வருகிறேன் என நிர்வாகிகளிடம் தெரிவிக்கத்தான் ஆடியோ பதிவிட்டேன் என்றார்.

 

Tags : Puducherry Women's Kong ,Puducherry ,Puducherry State ,Women's Congress ,President ,Nisha ,Congress ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...