×

கோடை மழை பொய்த்ததால் நீலகிரி விவசாயிகள் ஏமாற்றம்

ஊட்டி,மார்ச்16: நீலகிரியில் இரு நாட்கள் பெய்த கோடை மழை தொடர்ந்து பெய்யாமல் ஏமாற்றியதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும். அதே போல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வட கிழக்கு பருவமழை பெய்யும். இந்த மழையால், மாவட்டம் முழுவதும் மலை காய்கறி மற்றும் இதர காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தேயிலை தொழிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறித்த சமயத்தில் பெய்யாத நிலையில், விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்த சமயத்தில் பெய்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால், விவசாய நிலங்களில் உள்ள குளம், கிணறு, குட்டைகள் மற்றும் நீரோடைகள் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. கடந்த இரு மாதங்களுக்கு மேல் மழை பெய்யாத நிலையில், மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் மேற்கொண்டு வந்தவர்கள் பயிர் செய்வதை நிறுத்தினர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரு நாட்கள் இரவில் கோடை மழை பெய்தது. மாவட்டத்தில் பரவலாக இந்த மழை கொட்டியது. இந்த மழை விவசாயிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. மலைப்பாங்கான பகுதிகளில் கூட விவசாயம் மேற்கொள்ள ஆர்வம் காட்டினர். ஆனால், இந்த மழை தொடரவில்லை. மேக மூட்டம் கலைந்து கடந்த இரு நாட்களாக வழக்கம் போல், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மழை தொடரும் என்று எதிர்பார்ப்புடன் இருந்த விவசாயிகள் கவலைஅடைந்துளளனர்.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...