×

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டம்; லாலுவின் மகன் தேஜ் பிரதாப் கைது: 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு

பாட்னா: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாதின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா காந்தி மைதானத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததை தொடர்ந்து, ஜன்சக்தி ஜனதா தள கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக நேற்று பாட்னானில் நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி, கல்வீச்சு, கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் போக்குவரத்து போலீஸ் பூத் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து, தேஜ் பிரதாப் நேற்றிரவு 7.30 மணிக்கு ஷாப்பிங் மாலில் இருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும், ஆனால் வழக்கு நேற்றிரவு தான் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எப்.ஐ.ஆர் நகல் கூட வழங்கப்படவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் ஜெகன்னாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்டதற்கு முன்பாக பேசிய தேஜ் பிரதாப், ‘மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், நாங்கள் அவர்களுடன் உறுதியாக நிற்கிறோம். மாணவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்’ என்று கூறினார்.

Tags : LALU ,TEJ PRADAB ,Patna ,Patna court ,Lalu Prasad ,Tej Pratap Yadav ,Bihar ,Patna Gandhi Stadium ,
× RELATED கேரளா: மலப்புறம் மாவட்டத்தில்...