×

கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனுதாக்கல் மே 2-ம் தேதிக்கு பின் பிக்பாஸ் அல்லது புதிய படத்தில் நடிக்க கமல் போகலாம்

கோவை, மார்ச் 16:  கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகம் வந்தார். பின்னர், தேர்தல் நன்னடத்தை உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு அதற்கான படிவத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து, வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியனிடம் தாக்கல் செய்தார். அப்போது, பாஜ மாவட்ட பொறுப்பாளர் நந்தகுமார், முன்னாள் துணை மேயர் லீலாவதி உண்ணி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:

இந்த தொகுதியில் கடந்த முறை தோல்வியடைந்து இருந்தாலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்த்து இருக்கின்றேன். கோவை தெற்கு தொகுதியில் நிச்சயமாக நூறு சதவீதம் பாஜ வெற்றி பெறும். மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டதை தாண்டி கோவையை சர்வதேச நகரமாக மாற்றுவோம். சினிமா பிரபலங்கள் அத்தனை பேரும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை. திரைத்துறையில் இருந்து வந்தாலும் மக்கள் பணி செய்தவர்கள் மட்டுமே அரசியலில் வெற்றி பெற்று இருக்கின்றனர். டிவி ஸ்கிரின்களில் வந்து விட்டால் மட்டும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மே 2-ம் தேதிக்கு பின் பிக்பாஸ் அல்லது புதிய படத்தில் நடிப்பதற்கு கமல் போகலாம்.

இம்முறை அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பாக இருக்கின்றது. பெண்களை மையப்படுத்தியே அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  சிஏஏ குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளது. இதன் சாதக, பாதகங்கள் குறித்து  அதிமுக தலைவர்களுடன் உட்கார்ந்து பேசுவோம். கடந்த முறையைவிட தற்போது என்னுடைய சொத்து மதிப்பு உயர காரணம் மூதாதையர் குடும்ப சொத்தில் பாகபிரிவினை வந்ததுதான். இதை தவிர நல்ல வழக்குகள் என்னிடமும், என் கணவரிடமும் இருக்கின்றது. இதனால், நல்ல வருவாயும் இருக்கின்றது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Tags : Kamal ,Coimbatore South ,
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...