×

போலி செக்கிங் இன்ஸ்பெக்டர் கைது அரசு பஸ்சில் சோதனை செய்தபோது சிக்கினார் சேத்துப்பட்டில் பரபரப்பு

சேத்துப்பட்டு மார்ச் 16: சேத்துப்பட்டில் போலி செக்கிங் இன்ஸ்பெக்டர் அரசு பஸ்சில் சோதனை செய்து கொண்டிருந்தபோது சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேருந்து நிலையத்திற்கு நேற்று காலை விழுப்புரம்- வேலூர் செல்லும் அரசு பேருந்து வந்தது. இந்த பஸ்சில் செக்கிங் இன்ஸ்பெக்டர் எனக்கூறிக்கொண்டு ஒருவர் ஏறி டிக்கெட் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில், சிறிது நேரத்தில் அரசு போக்குவரத்துத்துறை செக்கிங் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அதே பஸ்சில் ஏறி பரிசோதனை செய்தார். அப்போது, பஸ்சில் ஏற்கனவே ஒருவர் பரிசோதனை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து, செக்கிங் செய்து கொண்டிருந்தவரை வெங்கடேசன் மடக்கி பிடித்து விசாரித்தார். விசாரணையில், ஆரணி கொசப்பாளையத்தை சேர்ந்த இளங்கோ(51) என்பது தெரிந்தது. மேலும், இவரது தந்தை ஏழுமலை அரசு போக்குவரத்துத்துறையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்ததும் தெரிந்தது. இதனால், எப்போதாவது இதுபோல் எண்ணம் தோன்றினால் அரசு பேருந்துகளில் ஏறி டிக்கெட் பரிசோதனை செய்து வருவதை இளங்கோ வழக்கமாக வைத்துள்ளதாக வெங்கடேசனிடம் இளங்கோ தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே வேலூரில் ஒரு முறை இதேபோல் செய்தேன் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இளங்கோவை செக்கிங் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சேத்துப்பட்டு போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிந்து இளங்கோவை கைது செய்து விசாரித்து வருகிறார். போலி செக்கிங் இன்ஸ்பெக்டர் பிடிபட்டுள்ள சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED திருவண்ணாமலை மற்றும் ஆரணி...