×

வேலூர் மாவட்டத்தில் 240 வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் வெறிச்சோடியது பண பரிவர்த்தனை முடங்கியதால் பொதுமக்கள் அவதி

வேலூர், மார்ச் 16: வேலூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் போராட்டத்தால் 240 வங்கிகள் வெறிச்சோடியது. பணவரித்தனை முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். நாடு முழுவதும் பொதுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 2 வங்கிகள், ஒரு இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றை மத்திய அரசு தற்போது தனியாரிடம் வழங்க முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே சில வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பொதுத்துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களை தனியாரிடம் கொடுப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்றும், இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 240 வங்கிகள் இந்த வேலை நிறுத்தம் போராட்டத்தில் பங்கேற்று உள்ளது. இந்த வங்கிகளில் பணியாற்றும் 2,700 ஊழியர்கள் பணிக்கு வராமல் புறக்கணித்து உள்ளனர். இதனால் பணபரிவர்த்தனை அடியோடு முடங்கி உள்ளது. வங்கிகளுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஏற்கனவே சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலேயே ஏடிஎம்களில் பணம் காலியாகிவிட்டது. 2000 அல்லது 500 மட்டுமே சிலவற்றில் கிடைக்கிறது. மேலும், இரண்டு நாட்களுக்கு ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது பொதுமக்களுக்கு சிரமமாக இருக்கும். அதேபோல நெட்பேங்கிங், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வேலூர் அண்ணாசாலையில் உள்ள எஸ்பிஐ தலைமை வங்கி முன்பு நேற்று காலை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷயங்களை எழுப்பினர். வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக பணிகள் அடியோடு முடங்கி உள்ளது.

Tags : Vellore district ,
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...