×

போலி முகவரி மூலமாக ஆஸ்டின் எம்.எல்.ஏ. குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பும் மர்ம நபர்கள் எஸ்.பி.யிடம், திமுகவினர் புகார்

நாகர்கோவில், மார்ச் 16 :
 போலியான முகவரி மூலம் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி ஆஸ்டின் எம்.எல்.ஏ., மீது அவதூறு பரப்பும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டம் தோவாளை ஒன்றிய திமுக 4 வது மண்டல பொறுப்பாளர் னிவாசன் மற்றும் நிர்வாகிகள் எஸ்.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக ஆஸ்டின் எம்.எல்.ஏ. மீண்டும் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணி செய்து வருகிறார். கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவராக, எந்த வித வேற்றுமை உணர்வும் இல்லாமல் மிக சிறப்பாக தனது தொகுதி மக்களுக்காக பணியாற்றினார். இதனால் தொகுதி மக்களிடம் அதிக செல்வாக்குடன் உள்ளார்.  நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார்.

அனைத்து தரப்பு மக்களிடமும் செல்வாக்குடன் உள்ள ஆஸ்டினின், நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிராக அவர் செயல்படுவதாகவும், குறிப்பிட்ட ஜாதியினருக்கு எதிரான மனநிலை உடையவர் என்றும் முற்றிலும் உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பேஸ்புக்கில் சிலர் பரப்பி வருகிறார்கள். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேஸ்புக் கணக்கு போலி முகவரியில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ள மத, ஜாதி ரீதியான பிரசாரங்களை குறிப்பிட்ட மர்ம நபர்கள்  இதில் பதிவிட்டு வருகிறார்கள். இது இந்திய தேர்தல் ஆணையத்தால், தடை செய்யப்பட்ட குற்ற செயல் ஆகும். எனவே உடனடியாக மேற்படி முகநூலில் சாதி, மத ரீதியாக பொய்யான பிரசாரம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார். ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சரவணன், வக்கீல் அணி ஜஸ்டின் கிறிஸ்டோபர், மதி, இளைஞரணி தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குலசேகரம் காவல் நிலையத்தில் புகார்
குலசேகரம்:  இதேபோன்று  குலசேகரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் திமுக தலைவர்கள் மற்றும் பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் ஆகியோர் மீது அவதூறு பிரசாரம் செய்துள்ளார். இதுகுறித்து திமுக வழக்கறிஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெபாஜாண் மற்றும் திமுகவின் குலசேகரம் காவல்  நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் உயர்  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்தனர். இதில் குலசேகரம் பேரூர் செயலாளர் ஜோஸ்எட்வர்ட்,  கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ்,  திருவட்டார் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்  பெர்ஜின், திற்பரப்பு பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பொன்  ஜேம்ஸ், மண்டல பொறுப்பாளர் மைக்கேல் ரெதிஷ், வழக்கறிஞர்கள் கிளாஸ்டின், ஜெபித், சுரேஷ், ஜெபாஸ்லின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Austin ,Facebook ,DMK ,
× RELATED பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட...