கொரோனா விதிமுறை பின்பற்றாத 2 நகை கடைகளுக்கு தலா a5 ஆயிரம் அபராதம் குமரி முழுவதும் மீண்டும் சோதனை தீவிரம்

நாகர்கோவில், மார்ச் 16: தமிழகத்திலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்து 206 ஆக உள்ளது. 16,867 பேர் குணம் அடைந்துள்ளனர். 261 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை இரட்ைட இலக்கத்தை எட்டி உள்ளது. தற்போது 78 பேர் சிகிச்சையில் உள்ளனர். பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் ஆங்காங்கே சோதனை செய்து, முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். நாகர்கோவில் மாநகரில் ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் மீண்டும்  முக கவசம் சோதனையில் இறங்கி உள்ளனர். நாள்தோறும்  சோதனை நடத்தி, முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், நகை கடைகள், ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள நகை கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்பட கொரோனா விதிமுறை பின்பற்றாத 2 நகை கடைகளுக்கு தலா ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில நகை கடைகளில் முக கவசம் இல்லாமல் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு தலா ₹200 அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ₹11,600 அபராதம் விதித்தனர். இதே போல் மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். களியக்காவிளை உள்பட மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர சோதனை நடக்கிறது. தினமும் 600 பேரிடம் சளி மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அந்தந்த நிறுவனங்கள் ஏற்கனவே கொரோனா கால விதிமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

போலீசார் கவனத்துடன் பணியாற்ற எஸ்.பி. வேண்டுகோள்

காவல்துறையினருக்கு ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தடுப்பூசி  போடும் பணி நேற்று நடைபெற்றது.  காலை 9.30க்கு எஸ்.பி. பத்ரிநாராயணன்  தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதை ெதாடர்ந்து போலீசார் தடுப்பூசி  போட்டுக்கொண்டனர். போலீசாருக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசிய எஸ்.பி. பத்ரி நாராயணன், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தேர்தல் சமயம் என்பதால், மிகுந்த கவனத்துடன், உடல் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும். முககவசம் அணிந்து பணியாற்றுங்கள். கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மிகவும் நெருக்கடியான நேரம் என்பதால், கவனத்துடன் பணியாற்றிட வேண்டும் என்றார்.

தடுப்பூசி எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது

இதற்கிடையே மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாகி உள்ளது.  மாவட்டத்தில் கடந்த 13ம்தேதி நிலவரப்படி, மொத்தம்  26,602 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களில் மொத்தம் 23,543 பேர்  முதற்கட்ட தடுப்பூசியையும், 3,059 பேர் 2ம் கட்ட தடுப்பூசியையும்  போட்டுள்ளனர்.  நேற்று காவல்துறை உள்பட தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஆயுதப்படை மைதானம், கலெக்டர் அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் தடுப்பூசி போட்டனர். தற்போது தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது

Related Stories:

>