×

பேச்சிப்பாறை அணையில் இருந்து மார்ச் 18 வரை தண்ணீர் விநியோகம்


நாகர்கோவில், மார்ச் 16:  குமரி மாவட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இவ்வாறு திறந்து விடப்படும் அணைகள் பிப்ரவரி மாதம் கடைசியில் மூடப்படும். பின்னர் மீண்டும் ஜூன் மாதம் முதல்வாரம் திறக்கப்படும்.  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவையொட்டி அணையில் இருந்து தண்ணீர் விநியோகம் நீட்டிக்கப்பட்டு திருவிழா முடியும் வரை தண்ணீர் திறந்து விடப்பட்ட பின்னர் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அணைகள் மூடப்படும். ஆனால் இந்த ஆண்டு மண்டைக்காடு திருவிழா கடந்த 8ம் தேதி முடிந்த பின்னரும் தண்ணீர் அணைகளில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளில் மார்ச் 15ம் தேதி வரை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதின் அடிப்படையில் இந்த ஆண்டு தொடர்ந்து தண்ணீர் விநியோகம் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மாவட்டத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வருவதாலும், அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாலும், விவசாய தேவைகளுக்காவும் கோரிக்கைகளின் அடிப்படையில் தண்ணீர் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் தண்ணீர் தொடர்ந்து விநியோகம் செய்யப்படுவதற்கு பாசன சபை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான கோரிக்கை குமரி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் தெங்கம்புதூர் சானல் பகுதியில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதி விவசாயிகள் நலன் கருதி மேலும் 3 நாட்கள் தண்ணீர் விநியோகம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 18ம் தேதி அணைகள் மூடப்படும் என்றும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் வசந்தி தெரிவித்தார். நேற்று காலை நிலவரப்படி  பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 38.05 அடியாகும். அணைக்கு 334 கன அடி தண்ணீர்  வந்து கொண்டிருந்தது. 861 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.  பெருஞ்சாணி நீர்மட்டம் 52.55 அடியாகும். அணைக்கு 7 கன அடி தண்ணீர் வரத்து  காணப்பட்டது. 230 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

Tags : Pechipparai Dam ,
× RELATED பேச்சிப்பாறை அணையில் 950 கனஅடி உபரிநீர்...