ஓசூர்: ஓசூரில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மாநில வரி அலுவலர் சிறையில் அடைக்கப்பட்டார். சேலத்தில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.எம். நகரை சேர்ந்தவர் நம்பி (75). சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கத்தின் (ஹோஸ்டியா) முன்னாள் தலைவரான இவர், துர்கா நகரில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் தொழிற்சாலைகளுக்கான வரியை செலுத்தி, பல ஆண்டுகளாக தொழில் நடத்தி வந்துள்ளார். இவர் செலுத்திய வரிக்கு, ரூ.10 லட்சம் திரும்ப பெற, ஓசூர் வணிக வரித்துறை வடக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த வணிக வரித்துறை மாநில வரி அலுவலர் (ஓசூர் வடக்கு) கலையரசன், ரூ.10 லட்சம் திரும்ப பெற வேண்டும் என்றால், 20 சதவீதம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியாக ரூ.1 லட்சம் கொடுப்பதாக நம்பி கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவரது அறிவுரையின்பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ.1 லட்சம் பணத்தை நம்பியிடம் கொடுத்து அனுப்பினர். அதனை கலையரசன் வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், அவரை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. பின்னர் அவரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் இன்று காலை கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் கலையரசனை அடைத்தனர். இதனிடையே லஞ்ச வழக்கில் சிக்கிய வணிகவரி அலுவலர் கலையரசனின் வீடு, சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி காலனியில் உள்ளது. இதையடுத்து இவரது வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிகுமார், நல்லம்மாள் மற்றும் போலீசார் விடிய,விடிய சோதனையில் ஈடுபட்டனர்.இன்று அதிகாலை 3 மணி வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் அவரின் வங்கி கணக்கை முடக்கவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
