×

சூடு பிடித்தது தேர்தல் களம் திமுக, அதிமுக, பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்

சேலம், மார்ச் 16: சேலம் மாவட்டத்தில், திமுக மற்றும் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று சூடுபிடிக்க தொடங்கியது. சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜேந்திரன், நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்து, பிரசாரத்தை தொடங்கினார். இதையொட்டி, ராமகிருஷ்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தை, முன்னாள் மேயரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான டாக்டர் சூடாமணி திறந்து வைத்தார்.

இதில், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, பெரியார் சிலை, அண்ணா சிலை மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வேட்பாளர் ராஜேந்திரன், அஸ்தம்பட்டி மத்திய தாலுகா அலுவலகத்திற்கு சென்று, தேர்தல் நடத்தும் அலுவலர் மாறனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில், சேலம் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் சரவணன், சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் தெற்கு தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் பாலசுப்பிரமணியம், நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ரவிச்சந்திரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மகன் செந்தில்வேலன் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக சேலம் திருச்சி மெயின் ரோடு ராஜசபரி தியேட்டர் அருகே, தெற்கு தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. பகுதி செயலாளர் சண்முகம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல், முன்னாள் எம்எல்ஏ, செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சேலம் வடக்கு தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ, நேற்று ஊர்வலமாக சென்று, அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் மத்திய தாலுகா அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், பகுதி செயலாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். அவருக்கு மாற்று வேட்பாளராக, வெங்கடாசலத்தின் மனைவி தனலட்சுமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக சேலம் அஸ்தம்பட்டி சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயம் அருகே, அதிமுக வடக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் பொன்னையன், செம்மலை ஆகியோர் திறந்து வைத்து பேசினர். இதில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அருள், நேற்று மதியம் 2.40 மணிக்கு, சேலம் மேற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்தார். பின்பு, சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சத்திய பாலகங்காதரனிடம், அருள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பா.ஜ., சுரேஷ்குமார், பாமக நிர்வாகிகள் கதிர்.ராசரத்தினம், சாம்ராஜ், அதிமுக சார்பில் பாலு, தியாகராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Electoral Field ,Exponential ,
× RELATED வருகிற 13 முதல் 23ம் தேதி வரை அதிமுக...