மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடும் 12,810 அலுவலர்களுக்கு பயிற்சி

தர்மபுரி, மார்ச் 16: தர்மபுரி மாவட்டத்தில் 12,810 அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு வரும் 21ம் தேதி 5 இடங்களில் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும், 12 லட்சத்து 60 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 400 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 12,810 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு கடந்த 4ம் தேதி முதல், காலை 9 மணி முதல் மாலை 5 வரை கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடக்கிறது.

மொத்தமுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் நிலை 1, 2, 3 என வாக்குச்சாவடியில் பணியாற்றும் 10 ஆயிரம் பேருக்கும், 2,810 காவலர்களுக்கும் 5 கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும் 21ம் தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக 50 தலைமை பயிற்சியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் 12,810 பேருக்கும் 5 இடத்தில் பயிற்சி அளிக்க உள்ளனர். தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியிலும், பென்னாகரம் தொகுதிக்கு பென்னாகரம் ஸ்ரீ விநாயகா மெட்ரிக் பள்ளியிலும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு பாலக்கோடு ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியிலும், பாப்பிரெட்டிப்பட்டி  சட்டமன்ற தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரியிலும், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஜெய் மெட்ரிக் பள்ளியிலும் பயிற்சி முகாம் நடக்கிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வாக்குச்சாவடி உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 12,810 பேருக்கும், வரும் 21ம் தேதி முதல் 5 இடங்களில் பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவி பேட் கருவி மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்வது, வாக்குப்பதிவு சதவீதம் குறித்து தலைமையிடத்திற்கு எஸ்எம்எஸ் மூலம் செய்தி அனுப்புவது, வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகு வரிசையில் காத்திருப்போருக்கு டோக்கன் வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது,’ என்றனர்.

Related Stories:

>