×

கட்சியிலிருந்து விலகும் அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்கு இளையான்குடி சேர்மன் பதவி வாய்ப்பு

இளையான்குடி, மார்ச் 16: இளையான்குடியில் அதிமுக கவுன்சிலர் ஒருவர், அக்கட்சியை விட்டு விலகியதால், திமுகவிற்கு சேர்மன் பதவி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளையான்குடி ஒன்றியத்தில் 16 ஒன்றிய குழு வார்டு(கவுன்சில்)உறுப்பினர்களில், திமுக சார்பில் 7 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 9 உறுப்பினர்களும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அதிமுக சார்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் நிரூபிக்கப்பட்டு, சேர்மன் பதவியை தக்கவைத்துக்கொன்டனர். இந்நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இளையான்குடி ஒன்றிய அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 16வது வார்டு அதிமுக கவுன்சிலர் முருகன், அக்கட்சியை விட்டு விலகி, தற்போது திமுகவில் இணைந்துள்ளார். அதனால் திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் தலா 8 ஒன்றிய வார்டு குழு உறுப்பினர்களுடன் சமமான நிலையில் உள்ளனர். தற்போது எம்எல்ஏ மற்றும் அதிமுகவின் கொள்கை பிடிக்காமல் மேலும் இரண்டு அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனால் அதிமுக சார்பில் உள்ள சேர்மன் பதவி, தற்போது திமுகவை தேடி வரும் வாய்ப்பு உள்ளதாக, இளையான்குடி ஒன்றியத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதனால் யாரெல்லாம் திமுகவிற்கு செல்லப் போகின்றார்கள் என அதிமுக வட்டாரத்தில் குழப்பம் நிலவு வருகிறது. திமுக தனது கவுன்சிலர்கள் பலத்தை நிரூபித்து, இளையான்குடி சேர்மன் பதவியை தக்கவைத்து கொள்ள போவதால், இளையான்குடி ஒன்றிய திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags : AIADMK ,Ilayankudi ,DMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...