×

தேர்தல் நேரத்தில் பிரச்சனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எஸ்பி ரவளிபிரியா எச்சரிக்கை

திண்டுக்கல், மார்ச் 16: திண்டுக்கல்லில் தேர்தல் நேரங்களில் எவரேனும் பிரச்சனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி ரவளிப்பிரியா எச்சரித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளத்துப்பாக்கி வைத்திருக்கும் நபர்களை கண்டறியும் பொருட்டு எஸ்.பி ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, கடந்த வாரம் முன்பு நத்தம் பழனிபட்டியில் நாட்டுத்துப்பாக்கி தயார் செய்ததாக ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 நாட்டுத்துப்பாக்கி பேரல்கள், 2 மரக்கட்டை  மற்றும் உதிரிபாகங்கள் கைப்பற்றினர். அதேபோல் 2021ம் ஆண்டின் தொடக்கம் முதல் இன்றுவரை நிலுவையிலிருந்த 809 பிடிகட்டளைகளை போலீசார் நிறைவேற்றியுள்ளனர். அதன்படி, புகையிலை புகார்கள் குறித்த சோதனையில் 179 வழக்குகள் பதியப்பட்டு 179 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.13 லட்சத்து 91 ஆயிரத்து 164 மதிப்புள்ள 1548 கிலோ குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை  7 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு சட்டவிரோத பணம் மற்றும் பொருட்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில், நான்கு திசைகளிலும் 11 பேர் கொண்ட போலீசார் 24 மணி நேரமும் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையை சுழற்சி முறையில் மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 72 பறக்கும்படைகள், 72 கூர்நோக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் வாகனத்தணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக இதுவரை  3 மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு 18 பதற்றமான வாக்குச்சாவடி  பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தியுள்ளனர். மேலும், ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளையும் எஸ்.பி  ரவளி ப்ரியா ஏ.டி.எஸ்.பி.,க்கள் மற்றும் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் என அனைவரும் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர். அதோடு சட்டவிரோத செயல்கள் மற்றும் தேர்தல் நேரத்தில் பிரச்சனை செய்யக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், தேர்தலை அமைதியான முறையில் நடத்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென எஸ்.பி., கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : SP ,Ravalipriya ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...