காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக, அதிமுக கூட்டணி கட்சியினர் வேட்பு மனுத்தாக்கல்

காஞ்சிபுரம், மார்ச் 16: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை  ஒருவர்கூட வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று  காஞ்சிபுரம் தொகுதி திமுக, பாமக, பிஎஸ்பி வேட்பாளர்கள், உத்திரமேரூர் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ததால் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் காஞ்சிபுரம் கலைஞர் பவளவிழா மாளிகையில் உள்ள அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வந்து  மாவட்ட வழங்கல் அலுவலரும், உத்திரமேரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பாபுவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி எம்பி சிறுவேடல் செல்வம், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் சாலவாக்கம் குமார், ஞானசேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி நேரு, காஹ்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.குப்பன், பரந்தூர் சங்கர், அவளூர் சீனிவாசன் ஆகியோர் உடன் வந்தனர்.

 அதேபோன்று காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் வக்கீல் எழிலரசனுடன் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பூபாலன், வழக்கறிஞர் அணி ரமேஷ்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி காஞ்சி தீனன், காங்கிரஸ் கட்சி நாதன், திமுக அவைத்தலைவர் சந்துரு ஆகியோர்  காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ராஜலட்சுமியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம், பாமக நிர்வாகிகள் பொன்.கங்காதரன், உமாபதி ஆகியோருடன் ஊர்வலமாக வந்து மாவட்ட வழங்கல் அலுவலர் பாபுவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். காஞ்சிபுரம் தொகுதி அதிமுக கூட்டணியைச் சேர்ந்த பாமக வேட்பாளர் மகேஷ்குமார் உடன், தமாகா மாவட்டத் தலைவர் மலையூர் புருஷோத்தமன், பாமக மாவட்ட செயலாளர் உமாபதி, அதிமுக நிர்வாகி அத்திவாக்கம் ரமேஷ் ஆகியோர் வந்து தேர்தல் அதிகாரி ராஜலட்சுமியிடம் மனுத்தாக்கல் செய்தனர். மேலும் காஞ்சிபுரம் தொகுதிக்கு பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பிரபாகரன் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து மனுத்தாக்கல் செய்தார்.

Related Stories:

>