×

ஏசி காரில் பறக்கும் படை அதிகாரிகள் வீதிகளில் போலீசார், வீடியோகிராபர்: கண்காணிப்புக்குழுவில் ஈகோ யுத்தம்

திருவள்ளூர், மார்ச் 16: தேர்தல் வாகன சோதனையில் இடம் பெற்றவர்களின் வாகனங்களில் அதிகாரிகள் அமர்ந்து கொண்டு, வீதியில் போலீசாரை களம் இறக்கி விட்டு சோதனையில் ஈடுபட செய்வது, பறக்கும் படை, கண்காணிப்புக்குழுவில் ஈகோ யுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், கடந்த 11ம் தேதி முதல் 30 பறக்கும் படையினர், 30 கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொன்றிலும், தலா மூன்று போலீசார், பாதுகாப்பு, வாகன சோதனைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாகன சோதனை தீவிரமடைந்த அதே நேரத்தில், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, மதியம் 1 மணி முதல் 3 மணி வரை, வாகன சோதனை தணிக்கையில் பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், வெயிலின் தாக்கத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல், அரசுத்துறை அதிகாரிகள், தங்களின் வாகனங்களிலே கண்ணாடியை ஏற்றிவிட்டு ஏ.சி.,யில் அமர்ந்து கொள்கின்றனர். மேலும், ஏசி இல்லாத வாகனங்களில், சிறிய அளவிலான மின்விசிறியை போட்டுக் கொண்டு, கதவை திறந்தபடி ஓய்வு எடுக்கின்றனர்.

ஆனால், போலீசார், வீடியோகிராபர்கள் மட்டும், உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல், சாலைகளிலும், வீதிகளிலும், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கண்காணிப்புக்குழு, பறக்கும் படையில் இடம் பெற்றுள்ள அரசுத்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே ஈகோ யுத்தம் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கூறுகையில், “வாகன தணிக்கை, சோதனைகளில் ஈடுபடும்போது சம்பவ இடத்தில், சோதனையில் அரசுத்துறை அதிகாரிகள் இருக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவிக்கிறது. ஆனால், அவர்கள் வெயிலை கண்டு அஞ்சி, கார்கள், மரங்களின் நிழல்களில் ஒதுங்கிக் கொள்கின்றனர். வெயிலின் கோர தாண்டவத்துக்கு நாங்களே பழியாகி வருகிறோம். சில இடங்களில், வாகன சோதனைகளில் பிரச்னை ஏற்பட்டு வருவதால், போலீஸ் உயரதிகாரிகள் மூலம் தேர்தல் கமிஷனின் பார்வைக்கு கொண்டு செல்ல உள்ளோம்” என்றனர்.

Tags : AC car ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...