×

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 15 ஆண்டுகளுக்கு முன் கிணற்றில் சிக்கிய பழைய வெடிகுண்டுகளை செயலிழக்க ராணுவ அதிகாரிகள் வருகை: போலீஸ் எஸ்பி திடீர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி, மார்ச் 16: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள பழைய கிணற்றில், கடந்த 2006ம் ஆண்டு, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஜென்சன் மற்றும் பாபு (எ) முகிலேசன் என்ற சிறுவர்கள் குளித்தனர். அப்போது, கிணற்றில் சிக்கிய ஒரு மூட்டையை மேலே கொண்டு வந்தனர். அதனை பிரித்து பார்த்ததில் ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. சிறுவர்கள் இருவரும் இதனை விளையாட்டு பொருள் என நினைத்து கற்களை வைத்து உடைத்தபோது வெடித்துச் சிதறியது. இதில், படுகாயமடைந்த சிறுவர்களை சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைகண்ணன் உத்தரவின்பேரில், பொறுப்பிலிருந்த கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நவீன் சந்தர் நாகேஷ் தலைமையிலான போலீசார், ஒட்டுமொத்த கிணற்று நீரையும் மின் மோட்டார் மூலம் வெளியேற்றி கிணற்றுக்குள் தேடியபோது, ஏ.கே. 47 ரகம் மற்றும் சிறிய ரக துப்பாக்கிகள் மூட்டை மூட்டையாய் சிக்கின. ஏ.கே. 47 துப்பாக்கியின் தோட்டாக்கள் முதல் சிறிய ரக துப்பாக்கி தோட்டாக்கள் வரை இருந்தன.

இதையடுத்து, காவல்துறையினர் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள 22 இரும்பு உருக்காலைகளை தீவிரமாக கண்காணித்தபோது, கண்ணிவெடி குண்டுகள் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் என ஒவ்வொரு இரும்பு உருக்காலைகளிலும் டன் கணக்கில் சிக்கின. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை உயர் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு அவற்றின் தன்மையை ஆராய்ந்தனர். அப்போது, அவை வெளிநாட்டிலிருந்து உருக்காலைக்கு பழைய இரும்புகள் என்ற போர்வையில் மூலப்பொருளாக இறக்குமதி செய்யப்பட்டவை என்பது தெரிந்தது. அமெரிக்க நாட்டின் முத்திரையும் பொறிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் அவை எந்த நேரத்திலும் வெடிக்கும் தன்மையுடன் இருப்பதை தெரிவித்து சென்றனர். அங்கிருந்து 10 டன் வெடிகுண்டு உள்ளிட்ட வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அலாய்ஸ் நிறுவனம் என்ற இரும்பு உருக்கு ஆலையின் மேலாளர், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த அசோக்குமார் ஜெயின். மேற்பார்வையாளர்களாக இருந்த மனோஜ் குமார், ராகேஷ் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பொடா நீதிமன்றத்தில் கடந்த 8.6.2008ம் ஆண்டு மாற்றப்பட்டது. இதற்கிடையில், 2012ம் ஆண்டு அசோக் குமார் ஜெயின் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்குக்கு தடை ஆணை பெற்றார். அந்த தடையானது நீதிமன்றத்தால் கடந்த வாரம் விளக்கிக் கொள்ளப்பட்டதால் இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற உள்ளது. குண்டு வெடித்து சிறுவர்கள் பாதிக்கப்பட்டு 15 ஆண்டுகளாக ஆகியும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசு அறிவித்த நிவாரணமும் இதுவரை வழங்கவில்லை கூறப்படுகிறது. அதேபோல் டன் கணக்கில் குவியல் குவியலாக தனியார் நிறுவனங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் சுமார் 10 டன் அளவிற்கு கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் வெட்டவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பூனாவில் உள்ள கார்கில் ரேஞ்ச் (அப்போதைய) அதிகாரியான சுபேதார் அப்துல் ஜபார், கடந்த 16-10-2008 அன்று இந்த குண்டுகளை நேரில் பார்வையிட்டு, பெரும்பாலான குண்டுகள் வெடிக்கும் நிலையில் இருப்பதை உறுதிசெய்து அதனை அழிக்க கடலுக்கு கொண்டு செல்ல அரசு முனைப்பு காட்ட வேண்டும் என தெரிவித்துவிட்டு சென்றார். தொடர்ந்து வரும் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மாதர்பாக்கம் பகுதியில் இந்த வெடிகுண்டுகளை ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் செயலிழக்க உள்ளனர். இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

Tags : Army ,Gummidipoondi Chipkot Industrial Estate ,
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...