போலீஸ் இன்பார்மரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் 5 ரவுடிகள் சரண்: போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

அண்ணாநகர்: சென்னை அமைந்தகரையில் போலீஸ் இன்பார்மரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய 5 ரவுடிகள் செஞ்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சென்னை அமைந்தகரை ஷெனாய் நகர் பாரதிபுரம் மெயின் ரோடு பகுதியை  சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). இவர், அமைந்தகரை காவல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த 10ம் தேதி இரவு வீட்டின் தரைத்தளத்தில் உள்ள அலுவலகத்தில்  சதீஷ்குமார் இருந்தபோது, 5 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து, சதீஷ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், படுகாயமடைந்த சதீஷ்குமாரை மீட்டு,  ராஜிவ்காந்தி அரசு  மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், சதீஷ்குமார் போலீசாருக்கு  இன்பார்மராக இருந்து  வந்தது  தெரியவந்தது. அமைந்தகரை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வது குறித்து அமைந்தகரை  போலீசாருக்கு இவர் தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால், போலீசார் அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால்,  தனிப்படை போலீசாருக்கு  தெரிவித்துள்ளார். அவர்கள் ரகசியமாக கண்காணித்து கஞ்சா விற்பனை செய்தவர்களை சமீபத்தில்  கைது செய்தனர். இதனால் அமைந்தகரை  போலீசாருக்கு  கிடைக்க வேண்டிய மாமுல் பறிபோனதால், சதீஷ்குமார்தான் தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கஞ்சா விற்று கைதானவர்களிடம் அமைந்தகரை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், கஞ்சா விற்ற  கும்பலை சேர்ந்த 5 பேர், சதீஷ்குமாரை வெட்டியது தெரியவந்தது. இதனிடையே, சதீஷ்குமார் வெட்டப்பட்டதற்கு போலீசார் தான் காரணம் எனவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்து அமைப்பின் தலைவர்  வசந்தகுமார் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமைந்தகரை பகுதியை சேர்ந்த ரவுடிகள் அப்பாஸ் (32), சக்திவேல் (25), பாலாஜி  (25), வினோத்குமார் (25), பாலமுரளி (30) ஆகிய 5 பேர் நேற்று முன்தினம் செஞ்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அமைந்தகரை போலீசார் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>