×

தனியார் மயமாக்கலை கண்டித்து வங்கி ஊழியர்களின் 2 நாள் ஸ்டிரைக் துவங்கியது: நாடு முழுவதும் வங்கிகள் மூடல்: 16,500 கோடி ‘செக்’ பரிவர்த்தனை முடக்கம் : ஏடிஎம் சேவை கடும் பாதிப்பு - பொதுமக்கள் அவதி

சென்னை: வங்கிகள் தனியார் மயமாக்கலை கண்டித்து வங்கி ஊழியர்களின் 2 நாட்கள் ஸ்டிரைக் நேற்று தொடங்கியது. பொதுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 2 வங்கிகளை மத்திய அரசு தனியாரிடம் வழங்க முடிவு செய்துள்ளது.  ஏற்கெனவே சில வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பொதுத்துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களை தனியாரிடம் கொடுப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனியாரிடம் வங்கிகளை  ஒப்படைப்பதற்கு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து மார்ச் 15 ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர்  அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை முதல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது.  

இந்த போராட்டத்தில் இந்திய அளவில் 10 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் 60,000 பேர் பங்கேற்றனர். இதனால் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. நாடு முழுவதும் வங்கி சேவை கடுமையாக  பாதிக்கப்பட்டது. பணம் டெபாசிட், பணம் எடுத்தல், செக் பரிமாற்றம் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை. சென்னை உள்பட தமிழகத்திலும் இதே நிலை தான் காணப்பட்டது.வாரத்தின் முதல் என்பதாலும், வங்கி திறந்திருக்கும் என்றும்  வாடிக்கையாளர்கள் அதிக அளவில் நேற்று வங்கிகளுக்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களில் வங்கி ஊழியர்கள் தான் பணத்தை நிரப்புவது  வழக்கம். ஆனால், வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் பணம் நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது.  வங்கிகள் முடியிருந்ததால் மக்கள் ஏடிஎம் மையங்களை முற்றுகையிட்டனர். இதனால், காலை 11 மணிக்கு மேல் சென்னையில் பல்வேறு  இடங்களில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் பணம் டெபாசிட் இயந்திரங்களும் பணம் நிரம்பி செயல்படாத நிலை ஏற்பட்டது.

பணம் இருந்த ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து சென்றனர். இரவில் இந்த ஏடிஎம்களிலும் பணம் தீர்ந்தது. இதனால், சென்னையில் இருந்த ஏடிஎம்கள் செயல்படாத நிலை தான்  காணப்பட்டது. இன்றும் 2வது நாளாக வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால், இயங்கி வந்த ஒரு சில ஏடிஎம்களின் சேவையும் இன்று பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நாளை(புதன்கிழமை) வங்கிகள் திறந்த பிறகு  தான் ஏடிஎம் சேவை மீண்டும் சீரடைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கடந்த 13ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாள் ஆகும். 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று அடுத்தடுத்து வந்தது.  நேற்று 3வது நாளாக வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் வங்கிகள் இயங்கவில்லை. தொடர் விடுமுறையால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வணிகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினர். வங்கிகள் தனியார்  மயமாக்கலை கண்டித்து சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் நேற்று காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல அந்தந்த மாவட்டங்களிலும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது: வங்கிகள் தனியார் மயமாக்கலை கண்டித்து வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் ஸ்டிரைக்கை தொடங்கியுள்ளனர். இந்த ஸ்டிரைக்கில்  இந்தியா முழுவதும் 86,000 வங்கி கிளைகளை சேர்ந்த 10 லட்சம் அதிகாரிகள், கிளை மேலாளர்கள்,  ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 16,000 வங்கி கிளைகளை சேர்ந்த 60 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.   இதனால்  இந்தியா முழுவதும் ரூ.16,500 கோடி மதிப்பிலான 2 கோடி காசோலை பரிவர்த்தனை முடங்கியுள்ளது. சென்னை பரிவர்த்தனை நிலையத்தில் மட்டும் 5 ஆயிரத்து 150 கோடி மதிப்பிலான 58 லட்சம் காசோலை பரிவர்த்தனை முடங்கியுள்ளது.   நாளை(இன்று) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் டவர் அருகில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில்  அடுத்தக்கட்டமாக கூடி முடிவை அறிவிப்போம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...