×

தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய கிராம மக்கள் வந்தவாசி அருகே போராட்டத்தால் பரபரப்பு அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததை கண்டித்து

வந்தவாசி, மார்ச் 15: வந்தவாசி அருகே அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததை கண்டித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாதூர் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளது.

மேலும், மயானத்திற்கு செல்ல பாதை அமைக்க கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதேபோல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து பாதூர் ஊராட்சியில் உள்ள மக்கள் நேற்று தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அவர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருநாவுக்கரசு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Vandavasi ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு