×

திமுக எம்பி திறந்து வைத்தார் குப்பைகள் அகற்ற கோரிக்கை தஞ்சை அடுத்த அம்மாப்பேட்டை பள்ளியில் கொரோனா பரவியதை விசாரிக்க 4 பேர் குழு

தஞ்சை, மார்ச் 15: தஞ்சை அருகே அம்மாப்பேட்டை பள்ளியில் கொரோனா எப்படி பரவியது என விசாரிக்க தாசில்தார் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.
தஞ்சை அருகே அம்மாப்பேட்டை பேரூராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதை நேரில் பார்வையிட்ட கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது, தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய பரிசோதனையில் 55 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் மாணவிகளின் 24 கிராமங்களில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சிறப்பு முகாம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளை தஞ்சை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் நலமுடன் உள்ளனர். மாணவிகள் தொடர்பில் இருந்த உறவினர்கள், அவரது பெற்றோர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 24 கிராமங்களையும் தொடர்ந்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணி மேற்கொள்ளும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டு இதுவரை 4.50 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கண்காணிப்பு பணியை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வட்டாரங்களிலும் தாசில்தார் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள 436 பள்ளிகளில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளியில் கொரோனா எப்படி பரவியது என விசாரிக்க தாசில்தார் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

பின்னர் கலெக்டர் கோவிந்தராவ் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவிகளிடம் காணொளி காட்சி மற்றும் தொலைபேசி மூலம் அவர்களின் உடல்நிலை குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், உணவு முறை குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரவீந்திரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், மருத்துவக் கல்லூரி நிலைய அலுவலர் செல்வம், தாசில்தார் முருகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : DMK ,Ammapettai ,Thanjavur ,
× RELATED 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் வண்டி...