×

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்ததால் கிராமப்புற கடைகளில் இட்லிக்கு கிராக்கி

புதுக்கோட்டை, மார்ச் 15: புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புறங்களில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்ததால் கடைகளில் இட்லிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. கடந்த சில நாட்களாக முன்னணி கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அந்த பணிகள் முடிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுடன் காலை 6 மணிக்கு புறப்பட்டு அனைத்து பகுதியிலும் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர். இவர்களை ஒருங்கிணைக்க வேட்பாளர்களின் நெருங்கியவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு காலை, மதியம், இரவில் சாப்பாடு வாங்கி கொடுத்து வருகின்றனர். இதற்காக வேட்பாளரின் ஆதரவாளர்கள் எந்த பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனரோ அந்த பகுதியில் உள்ள கடைகளில் காலையிலேயே இட்லிக்கு ஆர்டர் கொடுத்து விடுகின்றனர். இதையடுத்து இந்த ஆர்டரை எடுத்து அவர்கள் கேட்கும் நேரத்தில் இட்லியை தயார் செய்து சொல்கிற இடத்திற்கு கொண்டு போய் கடைக்காரர்கள் கொடுத்து விடுகின்றனர். இதேபோல் மாலை நேரத்தில் மீண்டும் பிரசாரத்தை துவங்கி இரவில் முடிக்கின்றனர்.

அப்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு முன்கூட்டியே ஆர்டர் செய்து வாங்கி கொடுக்கின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புற கடைகளில் இட்லிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. எந்த கடைக்கு சென்று பொதுமக்கள் கேட்டாலும் இட்லி இல்லை. இட்லி கிடைக்க தாமதமாகும் என்ற பதிலே வருகிறது. இதுகுறித்து கிராமங்களில் இட்லி கடை வைத்திருப்பவர்கள் கூறியதாவது: தேர்தல் பிரசாரத்திற்கு செல்வோர் முதல் நாளே எத்தனை இட்லி வேண்டும் என்று சொல்லி விடுகின்றனர். அதற்கு ஏற்றார்போல் நாங்கள் அரிசி ஊற வைத்து இட்லிக்கு தேவையான மாவுகளை தயார்படுத்துகிறோம். இப்படி ஒரே பதவிக்கு போட்டியிடும் அனைவரும் அந்த பகுதியில் உள்ள ஒரே கடையில் ஆர்டர் தருகின்றனர். இதனால் இட்லி வியாபாரம் களைகட்டி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஒரு இட்லி ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் கிராமத்தில் ஒரு இட்லி ரூ.3 வரை தான் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாள் காலையில் ஒரு வேட்பாளருக்கு பிரசாரத்துக்கு செல்வோருக்கு சுமார் 200 இட்லி தேவைப்படும் என்றால் கிராமத்தில் வாங்கும்போது ரூ.600க்குள் முடிந்து விடும். ஆனால் நகர் பகுதியில் வாங்கினால் ரூ.2 ஆயிரம் வரை செலவாகும். இதனால் வேட்பாளர்களுக்கு செலவு மிச்சம் ஏற்படுகிறது. இதனால் எங்களுக்கு அதிகளவில் விற்பனை நடந்து வருகிறது என்றனர்.

Tags : Pudukkottai ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...