தர்மபுரி, ஜூலை 21: தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், தர்மபுரி மாவட்டம் முழுவதுமாக சாலையோரங்களில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெடுஞ்சாலையின் ஓரங்களில் விழிப்புணர்வு படங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர்களில் காரில் செல்லும் போது பயணிகள், ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். டூவீலர் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டிச்செல்லக்கூடாது. மேலும் வாகன விதிமீறல்களை தடுக்கும் வகையிலும் வாசகங்கள் கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் ரோடு, சேலம் பைபாஸ் சாலை, பென்னனாகரம் சாலை, மொரப்பூர் சாலை, அரூர் – சேலம் சாலை, திருவண்ணாமலை சாலை என தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலும், அதேபோல் பாலக்கோடு கோட்டத்திற்குட்பட்ட சாலைகள் என மொத்தம் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர்டுகள் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு போர்டுகள், வாகன ஓட்டிகளை கவரும் வகையில் படங்களுடன் உள்ளதால் வரவேற்பை பெற்றுள்ளது.
