×

சுதந்திர தின 75ம் ஆண்டு கொண்டாட்டம் உப்பு சத்தியாகிரக சைக்கிள் பேரணி

நாகை, மார்ச் 15: இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தின் தொடக்க விழாவையொட்டி வேதாரண்யம் அருகே மூலக்கரை கிராமத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணியை கலெக்டர் பிரவீன்பிநாயர் துவக்கி வைத்தார். 2022 ஆகஸ்ட் 15ம் தேதியுடன் இந்திய சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தலைமையில் 259 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு தேசிய, சர்வதேச அளவில் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி வரையிலான நடைபயணத்தை துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடந்த வரலாற்று சிறப்புமிக்க உப்பு சத்தியா கிரகத்தை நினைவு கூறும் வகையில் கடந்த 12ம் தேதி சுதந்திர போராட்ட நினைவு சைக்கிள் பயணம் திருச்சியில் துவக்கி வைக்கப்பட்டது.

பேரணியானது தஞ்சை, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் மேலமருதூர் வழியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் மூலக்கரை கிராமத்திற்கு நேற்று வந்தடைந்தது. மூலக்கரை கிராமத்திலிருந்து கலெக்டர் பிரவீன்பி நாயர், சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மற்றும் ஆர்.வி. பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்றனர். பேரணி நிறைவாக நகராட்சி ராஜாஜி பூங்காவில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வில்லுப்பாட்டு, கரகாட்டம், தப்பாட்டம் ஆகியவை நடந்தது. கூடுதல் கலெக்டர் பிரசாந்த், ஏடிஎஸ்பி மகாதேவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் மகேஷ்வரி, நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, கலை பண்பாட்டுதுறை உதவி இயக்குநர் நீலமேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : 75th Independence Day Celebration ,Satyagraha Cycle Rally ,
× RELATED 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம்...