×

அரவக்குறிச்சியில் வழித்தடம் இருந்தும் ஊருக்குள் வராமல் பைபாஸ் வழியாக செல்லும் பஸ்கள்

அரவக்குறிச்சி, மார்ச் 15: வழித்தடம் இருந்தும் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் வழியாக சேலம், மதுரை சென்றுவிடும் பஸ்களால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அரவக்குறிச்சி நகரம் சேலம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவில் என்ற இடத்திலிருந்து 3 கி.மீ. உள்ளே அமைந்துள்ளது. இங்கிருந்து வணிகர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தினசரி சேலம், திருச்சி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு பல்வேறு அலுவல்கள் மற்றும் தொழில் தொடர்பாக சென்று வருகின்றனர். கரூர்-திண்டுக்கல் மார்க்கத்தில் சென்று வரும் பஸ்கள் மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3 கி.மீ. அரவக்குறிச்சி நகருக்குள் வந்து பள்ளபட்டி மண்மாரி வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை அடைந்து செல்கின்றது.

இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட சேலம் மற்றும் மதுரை செல்லும் பஸ்களுக்கு அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்ல வழித்தடம் உள்ளது. ஆனால், இந்த பஸ்கள் நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் வழியாக சென்று விடுகின்றன. ஏற்கனவே பெருகிவரும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப பஸ் வழித்தடங்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கின்றது. இதே போல சேலம், மதுரை போன்ற நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு நேரடி பஸ் வசதி இல்லாததால் கரூர் மற்றும் திண்டுக்கல் சென்று அங்கிருந்து சேலம் மற்றும் மதுரை பஸ் மாற்றி செல்ல வேண்டும்.

இதனால் குடும்பத்துடன் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுமைகளுடன் செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் 10 மணிக்கு மேல் ஊர் திரும்பும் வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போதுமான பஸ்கள் இல்லாமல் இரவில் அவதிப்படுகின்றனர். வழித்தடம் உள்ள இந்த 20க்கும் மேற்பட்ட சேலம் மற்றும் மதுரை செல்லும் பஸ்கள் அரவக்குறிச்சி வழியாக உள்ளே வந்து சென்றால் அரவக்குறிச்சி மட்டுமல்லாமல் வெளியூரில் தொழில் செய்யும் பள்ளபட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட வெளியூரில் தொழில் செய்யும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வணிகர்களுக்கும் வசதியாக இருக்கும்.

ஆகையால் வழித்தடம் இருந்தும் ஊருக்குள் வராமல் பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் மற்றும் மதுரை சென்று விடும் பஸ்கள் பயணிகள் நலன் கருதி அரவக்குறிச்சி உள்ளே வந்து செல்ல அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...