வடலூர், ஜூலை 20: கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று அமைச்சர் வெங்கட்ரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பதிவேட்டை ஆய்வு செய்து, அதில் பதிவு செய்த மருவாய் பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற விவசாயியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்கப்படுகிறதா என கேட்டறிந்தார். அப்போது விவசாயி நெல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை நெல்லை கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கப்படுகிறது என அமைச்சரிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அமைச்சர் வெங்கட்ரமணன் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மருவாய் அரசு நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் வேல்முருகனை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இதுவரை விவசாயிகளிடமிருந்து எவ்வளவு ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பது குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் தொடர்ந்து குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன்பேட்டை இலங்கை தமிழர்களுக்கு வினியோகம் செய்யப்படும் ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது, அப்பகுதியை சேர்ந்த இலங்கை தமிழர்கள் ரேஷன் கடை மாதத்தின் கடைசி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. அதிலும் வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் புழு, பூச்சிகள் நிறைந்து காணப்படுகிறது. ரேஷன் கடையை எப்போதும் திறப்பதில்லை. இதனால் பொருட்களை வாங்க முடியவில்லை என குற்றம்சாட்டினர். இதையடுத்து மாதத்தில் 15 நாட்களில் பொருட்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
